பிரித்தானிய பெண் ஒருவர், கருணை கொலைக்காக தனது வயது முதிர்ந்த தாயை சுவிட்சர்லாந்து அழைத்து வந்த நிலையில் அவரே உயிரிழக்க, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த 95 வயது பெண்மணி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தனது உயிரை விட முடிவு செய்தார்.
சுவிட்சர்லாந்தில், கருணைக் கொலை, சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது என்பதால், அவரது 58 வயது மகள் தாயை அழைத்துக் கொண்டு சுவிட்சர்லாந்துக்கு வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கடும் தலைவலி ஏற்பட்டு அந்த மகள் மயங்கி விழுந்தார். உடனடியாக ஒரு மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவருக்கு வலி நிவாரணி மருந்துகளை ஊசி மூலம் ஏற்றப்பட, சில மணி நேரங்களுக்குப்பிறகு அவர் கோமா நிலைக்கு சென்றார். கோமாவிலிருந்து மீளாமலே அவரது உயிர் பிரிந்தது.
உடற்கூறு பரிசோதனையில், மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் இறந்ததாக தெரியவந்தது.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், வலி நிவாரணி மருந்துகளை செலுத்துவதற்கு பதிலாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கலாம் என்று கூறி சூரிச் வழக்கறிஞர்கள் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
பல வழக்குகளுக்குப்பின் இறுதியாக முந்தைய தீர்ப்பை உறுதி செய்த ஃபெடரல் நீதிமன்றம், அந்த மருத்துவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.