பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவ, மாணவியர்கள் போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும்குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சிகொடூரத்திற்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் வஉசி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல தமிழகத்தில் பல பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தான் பொள்ளாச்சி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க காவல்துறையினர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.