கிளிநொச்சியில் காப்புறுதி நிறுவன முகாமையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில், பொலிசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கொல்லப்பட்ட பிரேமரமணன், கொலைசந்தேகநபரின் மனைவியுடன் தகாத உறவை பேணியதுடன், அவருடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை, பகரைன் நாட்டிலிருந்த கணவனிற்கு அனுப்பிய தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 5ம் திகதி காலை, கிளிநொச்சி உதயநகரில், கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளர் பிறேமரமணன் (32) வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார். வவுனியாவை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
தனது மனைவியுடன் தகாத உறவை பேணிய ஆத்திரத்தில், பிறேமரமணனை தீர்த்துக்கட்டிய சந்தேகநபர், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்குத் திரும்பும்வேளை விமான நிலையப் பொலிஸாரால் கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துவந்த பொலிஸார், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேகநபரை மேலும் 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கேட்டனர். நீதிமன்று அனுமதித்தது.
அதனடிப்படையில் இரண்டு நாள்கள் தடுத்துவைத்து சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், அவரது தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் ஒவ்வொன்றாக ஆராயப்பட்டன.
அவரது தொலைபேசியிலிருந்து பெறப்பட்ட ஒளிப்படம் ஒன்றில் மூன்று பெட்டிகளில் பெருமளவு றியால் பணக்கட்டுகள் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அந்தப் பணத்தை தான் இலங்கைக்கு எடுத்து வந்ததாக சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்தப் பணத்தை என்ன செய்தார் என்பது அவரால் குறிப்பிடப்படவில்லை.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரது நண்பரான ஆசிரியர் ஒருவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றனர்.
“யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் தொழில்நிமிர்த்தம் வசித்து வருகின்றேன். சந்தேகநபர் எனக்கு நெருக்கமானவர். அவர் கடந்த 3ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வந்து இறங்கியவுடன் தன்னை எனது வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு எனக்கு அழைப்பை எடுத்தார்.
அதனால் நான் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்குச் சென்று அவரை ஏற்றிவந்து எனது வீட்டில் தங்கவைத்தேன். மறுநாளான 4ஆம் திகதி தான் கிளிநொச்சியிலுள்ள எனது தாயாரின் வீட்டுக்கு செல்லவேண்டும், அங்கு தங்கி நின்றுகொண்டு எனது மனைவியுடன் பிறேமரமணனுக்கு தொடர்புள்ளமையை அறியவேண்டும் எனச் சந்தேகநபர் சொன்னார். எனது தாயாரின் வீடு சந்தேகநபரின் வீட்டுக்கு அண்மையாக ஒரே தெருவில் உள்ளது.
எனது மோட்டார் சைக்கிளையும் தருமாறு கோரினார். நான் மோட்டார் சைக்கிளை வழங்கினேன். 4ஆம் திகதி எனது அம்மா வீட்டுக்குச் சென்று பயணப்பைகளை வைத்துவிட்டு, தான் புதுக்குடியிருப்புக்குச் செல்லப்போகின்றேன் என்று கூறிவிட்டு அவர் சென்றுள்ளார்.
4ஆம் திகதி இரவு நான் சந்தேகநபருக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். தான் புதுக்குடியிருப்பில் நிற்பதாகக் கூறினார். மறுநாள் 5ஆம் திகதி காலை 8 மணியளவில் மீளவும் அவருக்கு நான் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினேன். எனினும் அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்தது“ என்று ஆசிரியர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அத்துடன், கொலை செய்யப்பட்ட பிறேமரமணனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது காப்புறுதி நிறுவனப் பணியாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
அன்றைய தினம் காலை வழமை போன்று முகாமையாளருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தேன். முகாமையாளரிடம் தங்குமிடமான வீட்டிலிருந்து புறப்பட்டு சிறிது தூரத்தில் முகத்தை மறைத்தவாறு மோட்டார் சைக்களில் வந்த ஒருவர் எமது மோட்டார் சைக்கிளை காலால் உதைந்தார். அதனால் நாம் இருவரும் கீழே வீழ்ந்தோம்.
அப்போது அந்த நபர் தனது கையில் வைத்திருந்த கத்தியால் முகாமையாளரை வெட்டினார். அதனால் அச்சமடைந்த நான் தப்பி ஓடி வந்துவிட்டேன். வெட்டிய நபரை எனக்குத் தெரியாது. அவரை அடையாளம் காட்ட என்னால் முடியாது“ என்று வாக்குமூலமளித்துள்ளார்.
பொலிசார் விசாரணைகளை தொடர்ந்து வருகிறார்கள்.