சென்னை: தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் சுமார் ரூ. 7 கோடி வென்றுள்ள சென்னை சிறுவன் லிடியனின் வெற்றி தன் வெற்றி போன்று இருப்பதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
இறுதிச் சுற்றில் அவர் இரண்டு கைகளால் இரண்டு பியானோக்களை வாசித்து பார்ப்பவர்களை வியக்க வைத்தார். அந்த லிடியனின் வெற்றியை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
சிபிஎஸ் தொலைக்காட்சி நடத்திய தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் வென்ற லிடியனின் வீட்டிற்கு சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் ஏ.ஆர். ரஹ்மான். ரஹ்மானுக்காக லிடியன் பியானோ வாசித்துக் காண்பித்தார். அவரின் பெற்றோரின் முகத்தில் பெருமிதம் இருந்தது. அந்த வீடியோவை ரஹ்மான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள லிடியன் ஏ.ஆர். ரஹ்மான் நடத்தும் கே.எம். இசைப் பள்ளியின் மாணவன் ஆவார். 150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட போட்டியில் லிடியன் வெற்றி பெற்றுள்ளார். அவரின் வெற்றி தன் வெற்றி போன்று உள்ளதாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
லிடியனை பார்க்கும் போது எல்லாம் எனக்கு நம்பிக்கை பிறக்கிறது. அவர் இந்தியாவின் இசை அம்பாசிடர் ஆவார் என்று நினைக்கிறேன்.
கண்டுகொள்ளாமல் இருக்கப்படும் நகரான சென்னைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க வைத்துள்ளார் லிடியன் என்கிறார் ரஹ்மான்.
இந்த போட்டியில் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது தான் என் முதல் போட்டி. இருப்பினும் எனக்கு பதட்டமாக இல்லை.
இசை ஆல்பங்கள் பண்ண வேண்டும், இசையமைப்பாளராக வேண்டும். நிலவில் பியானோ வாசிக்க வேண்டும். எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்ச்சியின் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்கிறார் லிடியன்.