தனது மனைவியை கொன்று உடலை துண்டுகளாக்கி வீசிய, கனேடிய கறிக்கடைக்காரன் என்று அழைக்கப்படும் ஒரு நபர் பெண்ணாக மாறி சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறாள்.
தற்போது 46 வயதாகும் காலித் ஃபர்ஹான், தன்னை சாரா ஃபர்ஹான் என்று அழைத்துக்கொள்கிறாள். மீண்டும் சமுதாயத்துடன் ஒன்றிணைந்து செல்வதற்காக சாராவுக்கு ஆறு மாதங்கள் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
திருநங்கையாக மாறி, கண் குறைபாட்டுடன் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள சாரா, தன்னை வழி நடத்த ஒரு நாய் வாங்குவதற்காக காத்திருக்கிறாள். ஆனால், பரிதாபத்திற்குரிய நிலையில் இன்று காணப்படும் சாராவின் பின்னணி சாதாரணமானதல்ல!
அப்போது காலித்தாக இருந்த காலகட்டத்தில் அவனது மனைவியாக இருந்தவர் கரீனா ஜானு. பால் வடியும் அழகு முகம் கொண்ட கரீனாவுக்கு ஒரு காலும் கையும் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன.
9 வயதாக இருக்கும்போது விவாகரத்தான பெற்றோர், கிறிஸ்துமஸ் பண்டிகை ஒன்றின்போது தற்கொலை செய்து கொண்ட தாய் என, கடைசியில் போதையின் பிடியில் சிக்கினாள் கரீனா.
இருந்தும் எல்லோரிடமும் ஆழ்ந்த அன்பு காட்டும் கரீனாவிடம் அடிக்கடி சண்டையிட்டு அடித்து உதைக்கும் காலித், ஒருநாள் போதையின் உச்சத்திலிருந்தபோது கரீனாவை தாக்கி கொலை செய்தான்.
தனது வீட்டின் பேஸ்மெண்டில் கரீனாவின் உடலை பல நாட்கள் காலித் போட்டு வைத்திருக்க, அக்கம் பக்கத்தோர் நாற்றம் அடிப்பதாக புகார் செய்தார்கள். உடனே கரீனாவின் உடலை துண்டுகளாக வெட்டிய காலித், துண்டுகளை பல்வேறு இடங்களில் வீசி விட்டான்.
பின்னர் தனது மனைவியின் புகைப்படத்துடன் அப்பாவியாக மனைவியைக் காணவில்லை என ஊடகங்களுக்கு பேட்டியளித்தான்.
ஆனால் அவனது வீட்டினருகே உடல் பாகங்கள் கிடைக்க, பொலிசாரின் சந்தேகம் காலித் மீதே திரும்பியது.
விசாரணையின் முடிவில் சிறையில் அடைக்கப்பட்டான் காலித். சிறையில் திருநங்கையாக மாறியதாக அவன் அறிவித்தையடுத்து பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டாள் சாரா என்கிற காலித்.
தற்போது ஜாமீனில் வந்திருக்கும் சாரா இனி கண் பார்வையற்றோருக்காகவும், திருநங்கைகளுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளாள்.