பொள்ளாச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம் – சற்று முன் வெளியான அறிவிப்பு.!

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, ஆபாச விடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், திருநாவுக்கரசுவை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி காவல்துறையினரிடம் புகார் அளித்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புகார் கொடுத்த பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டு பெண்ணின் ரகசியத்தை அரசு காக்கவில்லை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையில் புகார் அளித்த பெண்ணின் அடையாளம், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், பெற்றோர் விவரங்கள் என அனைத்தும் வெளியிடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் விதி.

இவ்வாறு இருக்கையில், ஒரு அரசாணையிலேயே இவ்வாறு செய்யப்பட்டிருந்ததை பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், முக்கியப் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்ணின் அடையாளத்தை நீக்கிவிட்டு புதிய அரசாணையைப் பிறப்பிக்குமாறு உத்தரவிட்டனர்.