அரசியல் தொடர்புகள் இருக்கிறது என்று எழுந்த குற்றச்சாட்டுகள்…தமிழக போலீஸின் நடவடிக்கைகளில் எழுந்த சந்தேகங்கள்… இதைத் தொடந்து வெடித்த மக்கள் கொந்தளிப்புகளைத் தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கினை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு.
வழக்கின் விசாரணையை சி.பி.ஐ ஆரம்பிக்கும் நொடி வரை தங்களது விசாரணையைத் தொய்வில்லாமல் நடத்த திட்டமிட்டு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ். சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி ஸ்ரீதர் மேற்பார்வையில் விசாரணை நடத்திவரும் எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான குழு. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் திருநாவுக்கரசுவின் சின்னப்பம்பாளையத்தில் உள்ள பூர்வீக வீட்டிலிருந்து (பெண்களை கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்படும் வீடு) தங்களது விசாரணையைத் தொடங்கியது.
நேற்றைய தினம், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசின் தற்போதைய வீட்டில் அவரது குடும்பத்தாரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விராசணை நடத்தினர்.
அந்த விசாரணையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் விசாரணை ஒருபுறம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, முக்கிய நபரான திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டது சி.பி.சி.ஐ.டி. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசரைக் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி விவாகரத்தில் புகார் தெரிவிக்க 9488442993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் நேற்று அறிவித்திருந்தனர்.
திருநாவுக்கரசின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி விசாரணை
அந்த எண்ணுக்கு இந்தக் கும்பலைப் பற்றி ஏராளமான புகார்கள் வந்து குவிந்துகொண்டிருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் சிலர், “தொடர்ந்து வரும் போன்களை எங்களால் சமாளிக்கவே முடியவில்லை.
இந்தக் குற்றவாளிகளை விடக்கூடாது. கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று ஏராளமானோர் போன் செய்கிறார்கள்.
அதுபோன்ற போன் கால்களை நாங்கள் தவிர்க்கிறோம். அதைத் தவிர, புகார் குறித்து 100-க்கும் மேற்பட்ட போன் கால்கள் வந்துள்ளது’ என்று அதிர வைத்தவர்கள், அதுகுறித்து மேலும் விரிவாகச் சொல்ல முடியாது என்றும் ரகசியம் காத்தார்கள்.
கோவை எஸ்.பி பாண்டியராஜன் வெறும் 4 வீடியோக்கள்தான் இருக்கிறது என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதை, சி.பி.சி.ஐ.டி போலீஸுக்குக் குவியும் போன் கால்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளது