கனடா அரசு, இறக்குமதி செய்யப்படும் மீன்களில் ஆண்டிபயாட்டிக்குகள் உள்ளனவா என்று சோதிக்குமேயொழிய, ஆண்டிபயாட்டிக்குகளுக்கு அடங்காத கிருமிகள் உள்ளனவா என சோதிப்பதில்லை.
ஆனால், சமீபத்திய சோதனை ஒன்றில், கனடாவின் முக்கிய கடைகளில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட இறால் மீன்களில், அதிக அளவில் ஆண்டிபயாட்டிக்குகளுக்கு அடங்காத கிருமிகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே உலக அளவில் இறால் மீன்களின் தேவை எக்கசக்கமாக அதிகரித்துள்ளது. கனடா மட்டுமே ஆண்டொன்றிற்கு 700 மில்லியன் டொலர்கள் அளவிற்கு இறால் மீன்களை ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
கனேடிய உணவு பாதுகாப்புத்துறை இறால் மீன் வளர்ப்பில் ஆண்டிபயாட்டிக்குகள் பயன்படுத்தப்படுவதை அனுமதிப்பதில்லை என்றாலும், ஆசிய இறால் வளர்ப்பில் பயன்படுத்தப்படும் அளவுக்கதிகமான ஆண்டிபயாட்டிக்குகளால் இன்னொரு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதிக அளவில் ஆண்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துவதால் பாக்டீரியங்கள் என்று அழைக்கப்படும் கிருமிகளுக்கு அவற்றை எதிர்க்கும் குணம் வந்துவிடுகிறது. அதுவும் பல ஆண்டிபயாட்டிக்குகளுக்கு அடங்காத ஒரு குணம் பாக்டீரியங்களுக்கு வந்து விடுகிறது.
இந்த பாக்டீரியங்கள் மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்தினால், அவற்றை குணமாக்குவதற்கான ஆண்டிபயாட்டிக்குகள் செயல்படாத நிலை ஏற்பட்டுவிடுவதால், நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.
கனடாவின் பல முக்கிய கடைகளில் விற்கப்படும் 51 இறால் மாதிரிகளை சோதித்ததில், 9 மாதிரிகளில், அதாவது 17 சதவிகித இறால்களில், குறைந்தது ஒரு ஆண்டிபயாட்டிக்குக்காவது அடங்காத கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கிருமிகள் நேரடியாக அவற்றை உண்ணும் மனிதர்களுக்கு நோய்களை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதோடு மட்டுமின்றி, மனித உடலுக்குள் இருக்கும் நல்ல பாக்டீரியங்களுக்கும் தங்கள் ஆண்டிபயாட்டிக்குகளுக்கு அடங்காத கெட்ட குணத்தை கடத்தி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டிபயாட்டிக்குகளுக்கு அடங்காத குணம் உடைய கிருமிகள் ஏற்படுத்தும் பிரச்சினைகள், உலகின் ஆரோக்கியத்துக்கு பெரும் அபாயம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஆண்டொன்றிற்கு 700,000 பேர் இந்த வகை கிருமிகள் ஏற்படுத்தும் நோய்களால் உயிரிழப்பதாக அது தெரிவிக்கிறது.
இதை அப்படியே விட்டால் 2050 வாக்கில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட, ஆண்டிபயாட்டிக்குகளுக்கு அடங்காத குணம் உடைய கிருமிகள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என பிரித்தானிய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.