வாடிக்கையாளர்களின் பணத்தை சூதாட்டத்தில் தொலைத்த வங்கி…..

சுவிட்சர்லாந்தில் தனியார் வங்கி மேலாளர் ஒருவர், தமது வாடிக்கையாளர்கள் சிலரது கணக்கில் இருந்து பணத்தை திருடி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த வங்கியில் வாடிக்கையாளர்களான 3 செல்வந்தர்களின் கணக்கில் இருந்து சுமார் 600,000 சுவிஸ் பிராங்குகள் அளவுக்கு திருடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பைல் பிராந்தியத்தில் உள்ள தனியார் வங்கியின் மேலாளரே இந்த கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2015 வரை அந்த நபர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒருமுறையேனும் பெருந்தொகை பரிசாக அள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் ஒருமுறைகூட அவருக்கு பரிசு கிட்டவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு அந்த 3 வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு, தமது வங்கிக்கணக்கில் இருந்து பணம் திடீரென்று மாயமாவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அவர் குறித்த வங்கியை அணுகியதும், தொடர்புடைய மேலாளர் அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அந்த வங்கியில் இருந்து அந்த நபரை முன்னறிவிப்பின்றி வெளியேற்றியுள்ளனர்.

மேலும், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் குறித்த நபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால், நிபந்தனையுடன் கூடிய 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபரால் பாதிக்கப்பட்ட Berne Cantonal Bank வாடிக்கையாளர்களுக்கு அவர்களது பணத்தையும் அந்த வங்கி திருப்பி அளித்துள்ளது.