பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தின் பின்னணி தகவல்கள் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ்.
இவரது இரண்டாவது மனைவி லதாவுக்கு பிறந்தவர்தான் திருநாவுக்கரசு மற்றும் ஒரு மகள். கனகராஜ் தனது முதல் மனைவியிடம் இருந்த கிடைத்த வரதட்சணையை வைத்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை தொடங்கியுள்ளார்.
2002, 2003-ம் ஆண்டுகளில் போதிய மழை இன்றி கடும் வறட்சி ஏற்பட்டது. அப்போது 2, 3 ஏக்கர் நிலம் வைத்திருந்த விவசாயிகள் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அவ்வாறு பாதிக்கப்பட்ட சின்னப்பம்பாளையம், தாத்தூர், சுப்பேகவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை தேடிப்பிடித்து அதிக வட்டிக்கு கடன் கொடுத்துள்ளார்.
அதற்கு ஈடாக கடன் வாங்கிய விவசாய நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டார். இதனால் 80 ஏக்கர் நிலங்களுக்கு மேல் வந்துள்ளது. அதனை அவர், கூடுதல் விலைக்கு விற்றதில் கனகராஜிடம் கோடிக்கணக்கில் பணம் புரண்டது.
முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, இரண்டாவதாக லதாவை திருமணம் செய்துகொண்டார். கல்லூரியில் படிக்கும்போதிருந்தே திருநாவுக்கரசு, தனது தந்தை பார்த்து வந்த வட்டி தொழிலில் கவனம் செலுத்தியுள்ளார்.
இதனால் அவருக்கு பணத்தின் மீது அதிக நாட்டம் அதிகரித்துள்ளது. அடிக்கடி தனது நண்பர்களுடன் காரில் வரும் திருநாவுக்கரசு சின்னப்பம்பாளையம் வீட்டிற்கு வந்து தங்குவார். மது அருந்திவிட்டு கும்மாளமிடுவது வாடிக்கையாக இருந்தது.
வீடு எப்போதும் பூட்டிக்கிடப்பது போன்றே காணப்படும். ஆனால் வீட்டுக்குள் மின்விசிறி சுற்றும். சில வேளைகளில் ஆட்கள் இருப்பது போல் சத்தம் கேட்கும்.
அடிக்கடி அதிகாலை வேளையில் அந்த வீட்டில் இருந்து கார் புறப்பட்டு செல்லும். பெரும்பாலும் இரவு 11 மணிக்கு மேல் காரில் திருநாவுக்கரசு பெண்களுடன் வருவார். இதனை யாராவது பார்த்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
திருநாவுக்கரசிடம் பணபலம் மற்றும் பெரிய பின்னணி இருந்த காரணத்தால் அப்பகுதி மக்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்த பண்ணை வீட்டுக்கு பல பெண்கள் வந்துநின்று பிரச்சனை செய்து கதறியுள்ளார்கள்.
தங்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருநாவுக்கரசு ஏமாற்றிவிட்டதாக பல கல்லூரி மாணவிகள் வந்து பிரச்சனை செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.