பொள்ளாச்சி பாலியல் துஸ்பிரயோகச் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
தமிழகம் உட்பட இந்தியாவையே பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிலுள்ள கே.எஸ்.ஆர் கல்லூரி மாணவர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கக்கோரி மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பெருமளவிலான மாணவர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி ஆண்டவர் தொழிநுட்பக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில், ஜனநாயக மாதர் சங்கத்தினரும் குறித்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது, பொது இடங்களில் பெண்கள் மீது, நடத்தப்படும் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில், ஆதித் தமிழர் மகளீர் பேரவைச் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் வாயில் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம் நடத்தினர்.
இதேவேளை புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோரி இரண்டாம் நாளாகவும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்தசாமி என்கின்ற மாணவனை, பொலிஸ் அதிகாரியொருவர் கன்னத்தில் அறைந்ததை அடுத்து அங்கு பதற்றமும் ஏற்பட்டது.
மேலும் ஆர்ப்பாட்டம் செய்த போராட்டக்காரர்களை பொலிஸார் ஒடுக்குவதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.