எத்தியோப்பிய விமான விபத்தில் மொத்த குடும்பத்தையும் இழந்த கனேடியர் தற்போது உடல்களை அடையாள காண முடியாமல் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் பிராம்டன் பகுதியில் குடியிருக்கும் இந்திய வம்சாவளி மனந்து வைத்யா என்பவரே, குறித்த விமான விபத்தில் கொல்லப்பட்ட தமது உறவினர்களின் சடலங்களை மீட்டுவர எத்தியோப்பியா சென்றவர்.
இந்த நிலையில், எத்தியோப்பிய அதிகாரிகள் தெரிவித்த கருத்து மனந்து வைத்யாவை கடுமையாக உலுக்கியுள்ளது.
தற்போதைய சூழலில் விபத்தில் சிக்கியவர்களின் சடலங்களை அடையாளம் காண்பது சிக்கல் எனவும், மேலும் ஒரு ஆறு மாதம் வரையில் ஆகலாம் எனவும் அங்குள்ள அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதால், சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்காது என நம்பியதாகவும்,
ஆனால் தற்போது அடையாளம் காண்பது அரிதான காரியம் என தெரியவந்துள்ளது எனவும் மனந்து தெரிவித்துள்ளார்.
மனந்து வைத்யா தமது பெற்றோர், சகோதரி, அவரது கணவர் மற்றும் அவர்களது இரு பிள்ளைகள் என மொத்தம் 6 பேர் கொண்ட மொத்த குடும்பத்தையும் கடந்த ஞாயிறு அன்று நடந்த விமான விபத்தில் இழந்துள்ளார்.
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து நைரோபி செல்லும் அந்த விமானத்தில் 35 நாடுகளை சேர்ந்த மொத்தம் 157 பேர் பயணம் மேற்கொண்டதாகவும்,
புறப்பட்ட சில மணி நேரத்திலேயே, விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
வைத்யா தமது உறவினர்களின் சடலங்களை பெற்றுக்கொண்டு, இறுதிச்சடங்கு மேற்கொள்ள இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தார்.
தற்போது மேலும் 6 மாதம் வரை காத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது உண்மையில் பதற வைப்பதாக உள்ளது என வைத்யா தெரிவித்துள்ளார்.