சிறிலங்காவை ஜெனிவாவில் காட்டிக் கொடுக்கக் கூடாது என்று அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ள நிலையிலேயே, மகிந்த ராஜபக்ச நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அண்மைய அறிக்கையும், இதற்கு முந்திய ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளும், சிறிலங்காவை ஒரு இறைமையுள்ள நாடா என்ற கேள்வியை எழுப்ப வைக்கின்றன.
30/1 தீர்மானம், ஆயுதப்படைகளையும் போர்க்காலத் தலைவர்களையும், வெளிநாடுகளின் நலன்களுக்காக காட்டிக் கொடுக்கின்ற ஒன்று.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்க முடியாது என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் 2015 செப்ரெம்பர் 18ஆம் நாள் வெளியிடப்பட்ட 30/61 இலக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அதன் பரிந்துரைகளான, வெளிநாட்டு சட்டவாளர்களின் பங்கேற்புடன் கலப்பு விசாரணை நீதிமன்றங்களை அமைக்க முடியாது என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கும், ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் அரசாங்கம் தெளிவாக கூற வேண்டும்.
இந்த விடயங்கள் சிறிலங்கா மக்களைக் காட்டிக் கொடுக்கும் செயல் என்பதை, ஜெனிவாவுக்குச் செல்லும் சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.