வீட்டுப் பணிப்பெண்ணைப் பிரம்பால் அடித்து, உதைத்து, சீனி கலந்த சோற்றை உண்ண வைத்து, அதை விழுங்க முடியாமல் அவர் எடுத்த வாந்தியையும் உட்கொள்ளச்செய்த தம்பதியருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் நாட்டைச் சேர்ந்த 32 வயது மோ மோ தான் என்பவரை, ஒருமுறை உள்ளாடையுடனும் பணிபுரியச் செய்தனர் அந்த தம்பதியர்.
அவரது நாட்டிலிருந்த குடும்பத்தினரைக் கொலையாளியைக் கொண்டு கொல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.
மனைவி 43 வயது சியா யுன் லிங்கிற்கு மூன்று ஆண்டுகள் 11 மாதம் சிறைத் தண்டனையும் $4,000 அபராதமும் இன்று விதிக்கப்பட்டது. பணிப்பெண்ணுக்கு $6,500 இழப்பீடும் வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது கணவர் 41 வயது டே வீ கியெட்டுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பணிப்பெண்ணுக்கு $3,000 இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் 31 நாள் விசாரிக்கப்பட்டு, இம்மாதம் 4ஆம் தேதி இருவர் மீதும் குற்றம் பதிவுசெய்யப்பட்டது.
இந்தத் தம்பதி ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்களது மற்றொரு பணிப்பெண்ணான 34 வயது ஃபித்பீயாவைத் துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
அந்த வழக்கில் டேவிற்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனையும் மனைவிக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.