மூன்று வழிகாட்டி நாய்களின் உதவியுடன் கண் தெரியாத ஒருவர் மாரத்தான் போட்டியின் இறுதிவரை பங்கேற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் பேனெக் (48) என்பவர் தன்னுடைய 20 வயதிலே பார்வை திறனை இழந்தார். அதன் பிறகு நடைபெற்ற பல்வேறு மாரத்தான் போட்டிகளில் மனிதர்களின் உதவியுடன் கலந்துகொண்டார்.
ஆனால் தற்போது முதன்முதலாக எந்த மனிதனின் உதவியும் இல்லாமல், ‘2019 யுனைடெட் ஏர்லைன்ஸ் நியூயார்க் நகரம் ஹாஃப் மராத்தான்’ போட்டியில் கலந்துகொண்டு நிறைவு செய்துள்ளார்.
இதில் அவருக்கு வழிகாட்டும் உதவியாக வாஃபிள்ஸ், வெஸ்டலி மற்றும் குஸ் என்கிற மூன்று நாய்கள் உதவியுள்ளன. இந்த நாய்கள் ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் சிறப்பு பயிற்சி பெற்றவை.
இந்த போட்டியின் மூலம், வரலாற்றில் கண் தெரியாத ஒரு நபர் மனிதன் உதவி இல்லாமல் மாரத்தான் போட்டியை முழுமையாக நிறைவு செய்திருப்பது இதுவே முதன்முறை என்கிற சாதனையை படைத்துள்ளார்.
கிளப்பின் கூற்றுப்படி, அவர் இரண்டு அரை மணி நேரத்திற்குள் 13.1 மைல் தூரத்தை கடந்துள்ளார். ஒவ்வொரு நாயும் மூன்று முதல் ஐந்து மைல்கள் தூரம் வரை தாமஸிற்கு வழி காட்டியுள்ளது. அதேசமயம் தாமஸ் வேகம் மைல் ஒன்றுக்கு 10.5 நிமிடங்கள் என சராசரியாக இருந்துள்ளது.