கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி இன்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல் கொடியேற்றி, தொண்டர்களுடன் கொண்டாடினர்.
வருகின்ற 24 ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் பட்டியல் படிப்படியாக அறிவிக்கப்படும் எனவும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்படும் என கமல் அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவர் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளம் என்று நெல்லையில் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் வரும் மக்களவை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறித்து சில தகவல்கள் அரசியல் களத்தில் கசிந்துள்ளது.
மத்திய சென்னை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட, எழும்பூர் நிர்வாகிகள் சார்பாக விருப்பமனு அளிக்கப்பட்டது. ஆனால், கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடி இடம்பெற்றிருக்கும் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட கமல்ஹாசன் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதைப்போல் அவரது கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், கமீலா நாசர் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா வரும் 24-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகளிலும் மநீம தனித்தே போட்டியிட உள்ள நிலையில், இன்று அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜினாமா செய்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சுரேஷ், மற்றும் மாநில செயற்குழு உறுப்பினரும், கடலூர் – நாகை பொறுப்பாளரான குமரவேல் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தியால் ராஜினாமா செய்துள்ளனர்.