சென்னையில் திருமணமாகி 9 மாதங்களில் தூக்கில் தொங்கிய மனைவி வழக்கில் அவரின் கணவர் கீர்த்திவாசன், அவரின் குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை, பெரம்பூர், கே.கே.ஆர். அவென்யூவில் குடியிருப்பவர் ராஜேந்திரன். மின்வாரிய ஊழியர். இவரின் மகள் சுவாதிகா ஸ்ரீ. 22 வயதான இவருக்கும், ராஜேந்திரனின் உறவினர் கீர்த்திவாசனுக்கும் கடந்த 9.6.2016ல் நாகப்பட்டினத்தில் திருமணம் நடந்தது.
சுவாதிகா ஸ்ரீ, பி.எஸ்சி. படித்துள்ளார். கீர்த்திவாசன், நார்வேயில் வேலை பார்க்கிறார். திருமணத்துக்குப்பிறகு சுவாதிகா ஸ்ரீயை நார்வேக்கு அழைத்துச் செல்வதாக கீர்த்திவாசன் கூறியிருந்தார்.
ஆனால், அழைத்துச் செல்லவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் 27.3.2017ல் சுவாதிகா ஸ்ரீ, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து திரு.வி.க.நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். திருமணமாகி 9 மாதங்களில் சுவாதிகா ஸ்ரீ தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்தது. அந்த விசாரணைக்கும் கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினர் வரவில்லை.
தொடர்ந்து நடந்த விசாரணையில் சுவாதிகா ஸ்ரீயின் தற்கொலைக்கு கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினர் காரணம் என்று தெரியவந்தது. இதனால், இந்த வழக்கை தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் மாற்றியுள்ளனர்.
சுவாதிகா ஸ்ரீயின் பெற்றோர் போலீஸாரிடம் கொடுத்துள்ள புகாரில், `என்னுடைய மகள் தற்கொலைக்கு கீர்த்திவாசனும் அவரின் குடும்பத்தினர்தான் காரணம்.
சுவாதிகா ஸ்ரீயின் இறுதிஅஞ்சலிக்குக்குகூட அவர்கள் வரவில்லை. எனவே, என்னுடைய மகளின் மரணத்துக்கு காரணமான கீர்த்திவாசனும் அவருடைய அப்பா உதயசந்திரன், அவரின் மனைவி மங்கையர் திலகம், கீர்த்திவாசனின் தம்பி கோகுலவாசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அதுதொடர்பாக விசாரிக்க கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், கீர்த்திவாசன் விசாரணைக்கு வரவில்லை.
இந்த நிலையில் சுவாதிகா ஸ்ரீ இறந்து ஓராண்டு கடந்த நிலையில் இந்த வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளார் செம்பியம் காவல் சரகத்துக்குப் புதியதாக பொறுப்பேற்றுள்ள உதவி கமிஷனர் அரிக்குமார்.
இந்த வழக்கு தொடர்பாக இணை கமிஷனர் விஜயகுமாரி, புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய் சரண் தேஜெஸ்வி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுக்கும் கீர்த்திவாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நார்வேயில் உள்ள அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர்.
இதனால், சுவாதிகா ஸ்ரீ தற்கொலை தொடர்பாக கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விசாரணை நடத்தவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சுவாதிகா ஸ்ரீ தற்கொலை வழக்கு தொடர்பாக கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பியுள்ளோம்.
ஆனால், அவர்கள் வரவில்லை. சம்பவத்தன்று, கீர்த்திவாசனுடன் சுவாதிகா ஸ்ரீ ஸ்கைப் மூலம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சுவாதிகா ஸ்ரீயிடம், தரக்குறைவாக கீர்த்திவாசன் பேசியதாக தெரியவந்துள்ளது. மேலும், உன்னை என்னுடன் நார்வேக்கு அழைத்துச் செல்லவோ உன்னுடன் வாழ எனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று கூறியுள்ளார்.
நீ உயிரோடு இருந்தால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்று சுவாதிகா ஸ்ரீக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக ராஜேந்திரன் விசாரணையின்போது எங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆர்.டி.ஓ. விசாரணை மற்றும் எங்களின் விசாரணைக்குப்பிறகே இந்த வழக்கை தற்கொலைக்குத் தூண்டியதாக மாற்றியுள்ளோம்” என்றனர்.
//போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், – தமிழக போலீஸாரால் என்னை எதுவும் செய்யமுடியாது என்று கீர்த்திவாசன் சவால் விட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. நார்வே போலீஸாரின் உதவியோடு, அவரை சென்னைக்கு அழைத்து …
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “சுவாதிகா ஸ்ரீ வழக்கு தொடர்பாக நாங்கள் அனுப்பிய சம்மனுக்கு கீர்த்திவாசன் தரப்பில் பதில் வந்துள்ளது.
ஆனால் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடமும் கீர்த்திவாசனை விசாரணைக்கு வரும்படி கூறியுள்ளோம்.
ஆனால், இதுவரை அவர்கள் வரவில்லை. கீர்த்திவாசன், விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது எங்களின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
தமிழக போலீஸாரால் என்னை எதுவும் செய்யமுடியாது என்று கீர்த்திவாசன் சவால் விட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. நார்வே போலீஸாரின் உதவியோடு, அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவுள்ளோம்” என்றார்.
கீர்த்திவாசன் குடும்பத்தினரை தொடர்புகொள்ள பலமுறை முயற்சி செய்தோம். அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.