குளித்தலை பகுதியில் நடந்த வாகன சோதனையின்போது, இலங்கையைச் சேர்ந்தவரிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாத 1,800 யூரோ பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கீழகுறப்பாளையம் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரி ஜெயபிரகாஷ் தலைமையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் குழுவினர் நேற்று முன்தினம் (17ம் தேதி) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருச்சியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது அந்த காரில், பிரான்ஸ் நாட்டு பணம் 1,800 யூரோ (இந்திய மதிப்பில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதால், காரில் வந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, காரில் வந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலஞ்சோ (வயது 35) என்பதும், இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர், பிரான்ஸில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. தற்போது, திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ள அலஞ்சோ, அவருடைய மனைவி மற்றும் குழந்தையுடன் ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, குளித்தலை உதவி தேர்தல் அலுவலர் லியாகத்திடம் ஒப்படைத்தனர். மேலும், “பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், அந்த பணம் திருப்பி ஒப்படைக்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.