பறக்கும் படைக்கு அதிரடிஉத்தரவு!

‘வாக்காளர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதை தடுக்க, கட்சி அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் தினந்தோறும் மூன்று முறை ரோந்து செல்ல வேண்டும்’ என, பறக்கும் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீட்டை முடித்து, தற்போது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதைத் தடுக்க, லோக்சபா தொகுதிகளில் உள்ள சட்டசபை தொகுதி வாரியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர், உள்ளூர் போலீஸில் நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை போலீஸார் உதவியுடன், அதிகாலை, நண்பகல், பிற்பகல், மாலை மற்றும் நள்ளிரவு வேளைகளில் கட்டாயம் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தங்கள் எல்லையில் உள்ள கட்சி அலுவலகங்கள், கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் வீடுகள் உள்ள பகுதிகளில் தினமும் குறைந்த பட்சம் மூன்று முறையாவது ரோந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.