மசூதிகளில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சிறப்பு பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது. பிரதமர் ஜெசிந்தா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. துவக்கத்திலேயே அரபு மொழியில் வணக்கம் கூறிய ஜெசிந்தா, தனது பேச்சை துவங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘பயங்கரவாத நடவடிக்கையால் பல உயிர்களை பலி வாங்கி உள்ளான். அதனால் அவனது பெயரை கேட்கக்கூட விரும்பவில்லை. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைச்சர்கள் பணியாற்றுவார்கள்.
சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும். அவன் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி. ஒருபோதும் அவனது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். நீங்களும் அவனது பெயரை உச்சரிப்பதை விடுத்து, அவனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பேசுங்கள் என அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, துப்பாக்கி சட்டத்தில் 10 நாட்களுக்குள் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.