நெல்லை மாநகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து மாநகர பகுதிகளில் பூங்காக்கள், சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதேபோல் சந்திப்பு பழைய பேருந்து நிலையம் அப்புறப்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகளுடன் கூடிய ஹைடெக் பேருந்து நிலையமாக மாற்றும் பணியும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாநகர டவுன் பேருந்துகள் சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
மாநகராட்சி சார்பில் பெண்பயணிகளுக்கு மொபைல் கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் மொபைல் கழிவறைகள் புறக்காவல் நிலையம் அருகில் உள்ளதால் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பாளை. பகுதிக்கு செல்லும் டவுன் பேருந்துகள் நிற்கும் இடத்தில் தென் பகுதியில் மொபைல் கழிவறைவண்டியை நிறுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். தற்போது இதில் ஆண்களுக்கான தற்காலிக கழிவறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கென்று தனியாக கழிவறைகள் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளை ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதை அருகே இறக்கி விட வேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
மேலும் மதுரை சாலையில் உள்ள தனியார் ஓட்டல்அருகே தடுப்புகளை அப்புறப்படுத்தினால் போக்குவரத்து நெருக்கடி குறைந்து பாளை. பகுதியை நோக்கிசெல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும்.
இதனை சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.