உயர்நீதிமன்றத்தில் வைத்து மனைவிக்கு கத்திகுத்து’.. பரபரப்பு சம்பவம்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ளது குடும்ப நல நீதிமன்றம். இங்கு நீதிபதியின் கண் முன்னாலேயே மனைவியை கணவர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.

மாநகரப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவர் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சரவணன். இவருக்கும் இவரது மனைவி வரலட்சுமிக்கும் இடையே தகராறு எழுந்ததாக தொடரப்பட்ட வழக்கினை கடந்த 5 வருடங்களாக இந்த குடும்ப நல நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த விசாரணைக்கு வழக்கம்போல் வருகை தந்த கனவன் – மனைவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி பேசத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் இவர்களின் பேச்சானது சிறிது நேரத்தில் வாக்குவதமாக மாறியதும் இருவரும் உச்சகட்டமாக வாய்ச்சண்டை போடத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் இந்த தகராறின்போது ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கணவர் சரவணன், தன் மனைவி என்றும், பெண் என்றும், சக மனிதி என்றும் பாராமல் உணர்ச்சிவேகத்தில் வரலட்சுமியை நோக்கி கத்தியை பாய்ச்சியுள்ளார்.

அங்கிருந்த நீதிபதி இளங்கோவனின் முன்னிலையில் கண் நொடிக்கும் நேரத்தில் சரவணன் வரலட்சுமியை கத்தியால் குத்தியதும் நீதிமன்றம் ஒரு நொடி ஆடிப்போனது.

உடனே, பரபரப்பாகியது அந்த இடம். காவலர்கள் பாய்ந்து சென்று சரவணனை பிடித்து கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கத்தி குத்து வாங்கிய, காயத்துடன் இருந்த வரலட்சுமி ஆம்புலன்ஸின் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட நீதிபதி அடுத்த சில நாழிகை பேச்சு மூச்சின்றி உறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.