நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இருமசூதிகளில் கடந்த 15ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.அவர்களில் 5 பேர் இந்தியர்கள் என கண்டறியப்பட்டு நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் கேரள மாநிலத்தை சேர்ந்த அன்ஸி அலிவாபா என்ற பெண்ணும் உள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்களூரை சேர்ந்தவர் அப்துல் நாசர்.இவரது மனைவி அன்ஸி அலி வாபா. 25 வயது நிறைந்த அவர் வேளாண் வர்த்தக மேலாண்மையில் முதுகலை படிக்க ஆசைப்பட்டுள்ளார். அதனால் அவர்கள் கடந்த ஆண்டு 48 ஆயிரம் டாலர் கடன் வாங்கி நியூசிலாந்துக்கு வந்து லிங்கான் பல்கலைக்கழகத்தில் அன்ஸி சேர்ந்துள்ளார்.
மேலும் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் தனது படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இந்நிலையில் இனி நல்ல வேலைக்கு சென்று நிறைய சம்பாதித்து சந்தோசமாக வாழலாம் என இருவரும் பல கனவுகளுடன் இருந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி இருவரும் மசூதிக்கு பிரார்த்தனைக்கு சென்றுள்ளனர். அப்பொழுது நடைபெற்ற பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் அன்ஸி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இது குறித்து அன்ஸி கணவர் அப்துல் நாசர் கூறுகையில், மசூதியில் பிரார்த்தனையின் போது நாங்கள் இருவரும் தனித்தனி பகுதிகளில் அமர்ந்து இருந்தோம். அப்பொழுது திடீரென ஒரு சத்தம் கேட்டது. அதனை நான் வெளியே குழந்தைகள் பலூன் வெடித்து இருப்பார்கள் என்று கருதினேன். பயங்கர ஆயுதங்களை பார்த்ததும் 300க்கும் மேற்பட்டோர் வாசலை நோக்கி ஓட தொடங்கினர்.
நான் வாசல் அருகே இருந்ததால் உடனே வெளியேறினேன். பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு மீண்டும் மசூதிக்கு சென்று அன்ஸியை தேடினேன். அங்கு அவள் அசைவற்று கிடந்தாள்.
போலீஸ்காரர் ஒருவர் என்னை தடுத்து அவளருகில் விடவில்லை. பின்னர் 24 மணி நேரம் கழித்து எங்களது வீட்டிற்கு வந்த போலீஸார் அன்ஸி இறந்துவிட்டதாக கூறினார். இதனால் நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அவளது உடலை அவளது பெற்றோர் வீட்டிற்கு அனுப்ப சொல்லி உள்ளேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.