இலங்கை பெண்ணின் உடல்…. அடக்கம் செய்யும் நேரத்தில் நடந்த திருப்பம்: அதிர்ச்சியில் பெற்றோர்

சவுதி அரேபியாவில் இறந்துபோன தங்களது மகனது உடலுக்கு பதிலாக சவப்பெட்டியில் இலங்கை நாட்டு பெண்ணின் உடல் வந்ததை பார்த்து குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவின் கொன்னி பகுதியை சேர்ந்த 29 வயதான ரபிக் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27 ஆம் திகதி ரபிக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது உடலை கேரளாவுக்கு கொண்டு வருவதற்காக குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்தததையடுத்து எம்பார்மிங் செய்யப்பட்ட ரபிக்கின் உடல் அவரது சொந்த ஊருக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தேவாலயத்தில் வைத்து பிரார்த்தனை செய்து முடிந்துவிட்டு, அடக்கம் செய்யப்போகையில் சவப்பெட்டியை திறந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏனெனில், சவப்பெட்டிக்குள் இருந்தது ஒரு பெண்ணின் உடல். இதனைத்தொடர்ந்து உடனடியாக கொன்னி பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் கொச்சி விமான நிலையம் மற்றும் சவுதி விமான நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில் , அது இலங்கை பெண்ணின் உடல் என்றும், ரபிக்கின் உடல் இலங்கைக்கு தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

சவுதி விமான நிலையத்தில் வைத்து இறந்துபோன உடல்கள் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் மாறியுள்ளன. இதனைத்தொடர்ந்து இலங்கை பெண்ணின் உடல் கோட்டயம் மருத்துவ கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மனவேதனையடைந்த ரபிக்கின் பெற்றோர், இலங்கையில் இருக்கும் எங்களது மகனது உடலை எப்படியாவது மீட்டு தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ரபிக்கிற்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், தற்போது அவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். எங்களது மகனின் இறப்பு எங்கள் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என தாயார் கூறியுள்ளார்.