கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கொன்னி பகுதியில் வசித்து வருபவர் ரசாக். இவரது மகன் ரபீக். 29 வயது நிறைந்த ரபீக் சவுதி அரேபியாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து இவரது உடலை உடல் சவுதி அரேபியாவில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேரளா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரஃபிக்கின் உடலை அவரது உறவினர்கள் கொச்சி விமானநிலையத்தில் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் ரபீக்கின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றது. அப்பொழுது வீட்டிலிருந்து உறவினர்கள் சவப் பெட்டியை திறந்து பார்த்த பொழுது பெட்டிக்குள் ரபீக்கின் உடலுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் உடல் இருந்தது. இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விமான நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையில் ரபீக்கின் உடல் இலங்கைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்தது.
மேலும் கொன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது இலங்கையை சேர்ந்த பெண்டாரா மேனகி என்ற பெண்ணின் உடல் எனவும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த பெண்ணின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும், ரபீக்கின் உடலை கேரளாவிற்கு கொண்டு வரவும் பத்தனம்திட்டா மாவட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இருவரது உடலும் சவுதி அரேபியா விமான நிலையத்தில் மாறியிருக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.