வெள்ளைவானில் கடத்தப்பட்ட இளைஞர்கள்…! வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்….!

கொழும்பில் வெள்ளைவானில் தமிழ் இளைஞர்கள் 2009, 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அந்தக் காலப்பகுதியில் கடற்படைக்குத் தலைமை வகித்தவர்கள் அறிந்திருந்ததாக, நீதிமன்றத்திற்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலப்பகுதியில் கடற்படையின் தளபதியாக செயற்பட்ட ஜயந்த பெரேரா மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட ரியல் அட்மிரல் ஆனந்த குருகே உள்ளிட்ட சில உயர்மட்ட அதிகாரிகள் இந்தக் கடத்தல் தொடர்பில் அறிந்திருந்ததாக மன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சாட்சியாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இதன்போது, வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, கடற்படையின் லெப்டினன் கமாண்டர் சம்பத் தயானந்தவை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொலைக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா, மேலதிக அறிக்கை ஒன்றினூடாக நீதிமன்றத்திற்கு இந்த விடயங்களை நேற்று தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கொழும்பு – கொட்டாஞ்சேனை மற்றும் பொரளை – வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் வசித்த வடிவேல் லோகநாதன் மற்றும் ரத்னசாமி பரமாநந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வானை, 72 துண்டுகளாக வெட்டி, வெலிசர கடற்படை முகாமில் மறைத்துவைத்திருந்த போது, அவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.