எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்த தமிழிசை!

17 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக தலைமைகளில் அமைந்து உள்ள கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பாஜகவின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.அதன்படி, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடியில் திமுக கனிமொழியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

முன்னதாக தமிழிசை அவர்கள் தனது விருப்ப தொகுதியாக தென்சென்னை தொகுதியை கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு தூத்துக்குடி தொகுதி ஓதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தூத்துக்குடியில் களமிறங்க விருப்பம் தெரிவித்து அதற்கான வேலைகளையும் செய்து வருகின்றார்.

இந்நிலையில், தென்சென்னை தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தனை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.

தென்சென்னை தொகுதி கிடைக்காததால் வருத்தத்தில் உள்ளதாக கூறி கூட்டணியில் குழப்பத்தை உண்டு பண்ண முயன்றவர்கள் அனைவருக்கும் தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் இது அமைந்துள்ளது என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இது குறித்து தமிழிசை தனது ட்வீட்டர் பக்கத்தில், “அஇஅதிமுக தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் சகோதரர் ஜெ.ஜெயவர்த்தன் அவர்கள் நேரில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் .

சகோதரர் ஜெ.ஜெயவர்த்தன் அவர்கள் சிறப்பான வெற்றியை பெற பாஜகவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறி அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கூட்டணி நலனை கருத்தில் கொண்டே தமிழிசை இந்த முடிவை எடுத்திருப்பார் என தெரிகிறது.