யாழ்ப்பாணத்தின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான வேம்படி மகளிர் உயர் கல்லூரி அதிபர், பிரதி அதிபர்கள் இல்லாமல் இயங்கி வருகிறது. சுமார் 3 வாரங்களாக இந்த நிலைமை நீடிக்கிறது.
வேம்படி மகளிர் உயர் கல்லூரியின் அதிபர் ஓய்வுபெற்று சென்றுவிட்டார். இதேவேளை, அதிபர் ஓய்வுபெறும்போது பாடசாலையின் இரண்டு பிரதி அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது. இதனால், பாடசாலையை நிர்வகிக்கும் பொறுப்பில் யாரும் இருக்கவில்லை. இதையடுத்து, மூத்த ஆசிரியை ஒருவரே பதில் அதிபராக கடமையாற்றினார்.
இந்த நிலையில் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை பழைய மாணவர் சங்கம் என்பன அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர் ஆகியோரின் வெற்றிடங்களிற்கு புதிய பெயர்களை சிபாரிசு செய்து, கொழும்பு கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த கடிதம் அனுப்பி பல நாளாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி, யாழ் மத்திய கல்லூரியில் கடமையாற்றிய உப அதிபர் ஒருவர், தற்போது வேட்படி மகளிர் உயர் கல்லூரியின் உப அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், அதிபர், பிரதி அதிபர்கள் வெற்றிடம் நீடிக்கின்றது.
இதேவேளை, யாழ் இந்துக்கல்லூரியில் கடமையாற்றும் பிரதி அதிபர் ஒருவரும் வேம்படி மகளிர் உயர் கல்லூரி அதிபர் பதவியை குறிவைத்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 வருடங்களின் முன்னர் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் கடமையாற்றியிருந்த குறிப்பிட்ட பிரதி அதிபரை, பாடசாலை சமூகம் சிபாரிசு செய்திருக்கவில்லை.
எனினும், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் ஊடாக, கல்லூரியின் அதிபர் பதவிக்கு வர முயற்சிப்பதாக கல்லூரி சமூகம் குற்றம்சாட்டியுள்ளது.இது தொடர்பாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனையும் அவர்கள் சந்தித்து பேசியிருந்தனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் வலய கல்விப் பணிப்பாளர் பதவி கடந்த வருடமாக வெற்றிடமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.