இலங்கையில் வரட்சி நிலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை தணிக்க செயற்கை மழையை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒத்திகை நடவடிக்கை இன்று மவுசாகலை நீர்த்தேக்கம் உள்ள பிரதேசம் உட்பட பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையினரால் Y-12 விமானம் மூலம் மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு மேல் 8000 அடி உயரத்தில் முகில்களின் மேல் இரசாயனம் தூவப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய சுமார் 45 நிமிடங்கள் செயற்கை மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியடைந்ததை அடுத்து ஏனைய பகுதிகளிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த பொறியிலாளர்கள் இந்த செயற்கை மழையை ஏற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த இரசாயனம் முகிலுடன் கலந்தவுடன் முகில் உடனடியாக கறுப்பு நிறத்திற்கு மாற்றமடைந்து மழை உருவாகும் சாத்தியம் ஏற்படுகிறது.
முதலில், வானில் நகர்ந்துகொண்டிருக்கும் மேகங்களை மழை தேவைப்படும் இடத்திற்கு ஒன்றுகூட்ட வேண்டும். அதற்கு அந்த பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும். கல்சியம் கார்பைட், கல்சியம் ஒக்ஸைட், உப்பும் யூரியாவும் சேர்ந்த கலவை/ அமோனியம் நைட்ரேட் கலவையை விமானங்கள் மூலம் அந்த பகுதியில் இருக்கும் மேகங்களின் மேல் தூவி அப்பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் ஈரத்தன்மையை அதிகரித்து மழை மேகங்கள் உருவாக்குவார்கள்.
அடுத்து, மழை மேகங்களின் கணத்தை அதிகரிக்க சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றை தூவி மேலும் அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்று கூடட்டுவார்கள். இது விமானம் மூலம் அல்லது பீரங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும்.
இறுதியாக, வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுவதன் மூலம் மேகங்கள் குளிச்சியாக்கப்படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளி வெளியேறி மழை பெய்கிறது!
செயற்கை மழையினால் உடலிற்கோ அல்லது தாவரங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை, இயற்கை மழையைப்போன்றதாகவே இருக்கும். துளிகளின் அளவும் சில வேளைகளில் பெரியதாக இருக்கலாம்.
ஆனால், ஒரு இடத்தில் வலுக்கட்டாயமாக மேகங்களை கூட்டி மழையை பெய்விப்பதால் பல இடங்களில் இயற்கையாக பெய்ய வேண்டிய மழை பெய்யாது வறட்சி ஏற்படும். காலநிலை மேலும் மோசமடையும்.
செயற்கையாக மழை பெய்விக்க தேவையான அனைத்தையும் செய்தும் சில நேரங்களில் மழை பெய்வதில்லை. சில நேரங்களில் எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை பெய்து அழிவை ஏற்படுத்தும்
செயற்கை மழை பரிசோதனையில் கனடாவின் கியூபக் நகரில் மூன்று மாதங்களில் சுமார் 60 நாட்கள் மழை பெய்து அழிவை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.