நாடாளுமன்றத்தில் சுமந்திரனின் அறிவிப்பால் தடுமாறும் ரணில்!

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் நீதிச் செயல்முறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனிவாவில் உரையாற்றியமை ஏமாற்றம் அளிக்கிறது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக் கொள்ள இணங்கி, 3 தீர்மானங்களிலும் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்காக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைப்பதை இலங்கை அரசியலமைப்பு தடை செய்யவில்லை.

நாட்டின் நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, 2015இல் நீதி அமைச்சராக இருந்த விஜேதாச ராஜபக்ச, இணங்கியிருந்தார்.

அவரது இணக்கத்தின் அடிப்படையில் தான், 30/1 தீர்மானத்தில் கையெழுத்திடப்பட்டது.

2013ஆம் ஆண்டு முன்னாள் தலைமை நீதியரசருக்கு எதிரான குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோது, அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த விஜேதாச ராஜபக்ச, வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் இணைத்துக் கொள்ள கோரும் தனிநபர் பிரேரரணையை சமர்ப்பித்திருந்தார்.

தமிழ் மக்கள் முற்றிலும் வெளிநாட்டு நீதிப் பொறிமுறையைத் தான் கேட்கிறார்கள்.

இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் அனைத்துலக வாக்குறுதியை தொடர்ந்தும் மீறினால், இலங்கை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை அல்லது ஏனைய வெளிநாட்டு நீதிப் பொறிமுறையை நாடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சுமந்திரனின் குறித்த எச்சரிக்கையானது பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருக்கும் மற்றும் மகிந்த, மைத்திரி தரப்பினருக்கும் பாரிய சவாலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அரசாங்கம் முன்வைத்த வரவு செலவுத் திட்டம் தொடக்கம் அரசின் நடவடிக்கைகள் பல சுமந்திரனின் கருத்துக்களால் பாதிக்கப்படலாம் என்ற தடுமாற்றத்தில் ரணில் இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.