பிரித்தானியாவில் வீடில்லாமல் சாலையில் வசித்து வந்த நபர் வைத்த உருக்கமான கோரிக்கையின் படி அவருக்கு தங்க இடமும் வேலையும் கிடைத்துள்ளது.
ஆண்டனி ஜான்சன் (37) என்ற நபர் கடந்த 9 ஆண்டுகளாக வீடு வாசல் இன்றி East Sussex பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையோரத்தில் கூடாரம் அமைத்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு பேப்பரில் உருக்கமான கோரிக்கையை எழுதி தன்னருகில் வைத்து கொண்டார் ஜான்சன்.
அதில், எனக்கு வேலை வேண்டும், சம்பளம் இல்லாமல் வேலை செய்ய தயார், ஏனெனில் நான் எப்படி வேலை செய்வேன் என்பதை உங்களுக்கு உணர்த்துவேன் என எழுதியிருந்தார்.
இதை பார்த்து தனக்கு யாராவது வேலை கொடுத்தால் தன்னுடையை வாழ்க்கை தரம் உயரும் என்ற எண்ணத்திலேயே அவர் அப்படி எழுதியிருந்தார்.
இந்நிலையில் இந்த விடயத்தை சார்லேட் ஹோவர்ட் (16) என்ற சிறுமி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதை பார்த்த நெல்சன் என்பவர் ஜான்சனுக்கு தோட்ட வேலை கொடுக்க முன்வந்து அவரை தொடர்பு கொண்டுள்ளார்.
இது குறித்து ஜான்சன் கூறுகையில், நான் எழுதி வைத்திருந்ததை சார்லேட் பேஸ்புக்கில் பதிவிட்டதன் காரணமாகவே இந்த வேலை எனக்கு கிடைத்துள்ளது, என்னை அவர் பார்த்த போது உதவி செய்யவேண்டும் என நினைத்தார், மிகவும் நல்ல குணம் படைத்தவர் சார்லேட்.
நான் ஒரு சமயம் மிகவும் மோசமானவனாக வாழ்ந்தவன், போதை மருந்துகள் உட்கொள்கிறவர்கள், குற்றவாளிகள் தான் என் நண்பர்களாக இருந்தார்கள்.
ஆனால் இப்போது சமூக தொண்டு செய்கிறவர்கள் போன்றவர்களுடன் நான் பழகி வருகிறேன் என கூறியுள்ளார்.
இதோடு சிறுமி சார்லேட் கேரவன் வேன் ஒன்றை ஓன்லைன் மூலம் நிதியுதவி பெற்று ஜான்சனுக்காக வாங்கியுள்ளார்.
நிதியுதவியாக அவருக்கு £860 கிடைத்த நிலையிலேயே கேரவனை வாங்கியுள்ளார்.
இதன்மூலம் சாலையில் வசிக்கும் ஜான்சன் இதில் இனி தங்கி கொள்வார்.
சார்லேட், நெல்சன் உள்ளிட்ட பலபேர் ஜான்சனுக்கு உதவிகள் செய்துள்ள நிலையில் எல்லோரும் மனம் உருக அவர் நன்றி தெரிவித்துள்ளார்.