இலங்கை அணியின் இசுரு உதான அபாரமாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் அவரின் ஆட்டம் வீண்போன நிலையில் 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என தன்வசப்படுத்திக்கொண்டுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரிலும் 5 போட்களைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 போட்டியைக் கொண்ட இருபதுக்கு -20 தொடரிலும் பங்கேற்று விளையாடியது.
இந்நிலையில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒருநாள் தொடரை 5-0 என தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 போட்டியின் கேப்டவுனில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் சுப்பர் ஓவர் மூலம் தென்னாபரிக்க அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது போட்டி நேற்று செஞ்சூரியனில் இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடுத்தாடுமாறு தென்னாபிரிக்க அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இந்நிலையில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.
தென்னாபிரிக்க அணி சார்பாக ஹென்றிக் 65 ஓட்டங்களையும் டசென் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதையடுத்து 181 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு ஓட்டத்தை இலங்கை அணி பெற்றிருந்தபோது முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது.
இருப்பினும் இசுரு உதான தனியொருவராக இறுதிவரை போராடி ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களைப் பெற்றபோதும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை.
இதனால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப்பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணி 2-0 என வெற்றிபெற்று தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டி நாளை 24 ஆம் திகதி ஜோகனஸ் பேர்க்கில் இடம்பெறவுள்ளது.