யாழ்.நகரப் பகுதியில் பொது இடங்களில் விளம்பரங்களை (போஸ்டர்கள்) ஒட்டுவதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் அறிவித்துள்ளார்.
அறிவிப்பினை மீறி விளம்பரங்களை ஒட்டும் நிறுவனங்கள் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் முதல்வர் மேலும் எச்சரிக்கை செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ்.மாநக சபைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு நிறுவனங்களாக இருந்தாலும் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற தீர்மானம் சபை உறுப்பினர் வ.பார்த்தீபனால் கொண்டுவரப்பட்டிருந்தது. அத் தீர்மானம் இறுக்கமான முறையில் நடமுறைப்பத்தப்படவுள்ளது. குறிப்பாக தனியார் அல்லது அரச நிறுவனங்கள், அரசியல் சார்ந்த கட்சிகள், திரையரங்கள், கல்வி நிறுவனங்களாக போனற எந்த நிறுவனங்களாக இருந்தாலும் அவர்கள் சார்ந்த விளம்பரங்களை பொது மக்களுடைய மதில்கள், சுவர்கள், அரச திணைக்களங்களில் சுவர்களிலோ, பொது இடங்களில் சுவர்களிலோ விளம்பரங்களை ஒட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்கள் அனைத்தும் இதுவரை காலமும் பொறுப்பற்ற விதத்தில் தாங்கள் நினைத்த படி பொது மக்களின் சுவர்களில் பசைகளை பூசி விளம்பரங்களை ஒட்டி வந்தார்கள். இனிவரும் நாட்களில் இவ்வாறு யாழ்.நகரத்தை அசுத்தப்படுத்த அனுமதிக்க முடியாது. சுத்தமான பசுமையான நகரை உருவாக்க இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளை மாநகர சபை மேற்கொள்ளும்.
இந் நடவடிக்கைகள் தொடர்பில் சகல நிறுவனங்களுக்கும் எழுத்து மூலமான உரிய அறிவிப்பினை வழங்க உள்ளோம். அவ்வறிவித்தலை மீறி செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீதிமன்றத்திலும் முற்படுத்தப்படுவார்கள்.
தேர்தல் காலங்களிலும் இந் நடவடிக்கை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும். இவ்வாறு விளம்பரப்படுத்த தேவையானவர்கள் மாநகர சபையுடன் தொடர்பு கொண்டால் அதற்கேற்ற நடவடிக்கை சபையால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.