புகைப்படங்களை பார்த்து தற்கொலை செய்துகொண்ட சிறுமி… இளவரசர் வில்லியம் செய்யவுள்ள செயல்

சமூகவலைதளத்தில் மன அழுத்தம், தற்கொலை தொடர்பான புகைப்படங்களை பார்த்து உயிரை மாய்த்து கொண்ட பிரித்தானிய சிறுமியின் உறவினர்களை தொடர்பு கொண்டு இளவரசர் வில்லியம் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலி ரூசல் (14) என்ற சிறுமி சமூகவலைதளத்தில் கவலை, மன அழுத்தம், மற்றும் தற்கொலை புகைப்படங்களை பார்த்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் பிரித்தானிய இளவரசர் வில்லியம் இது குறித்து கவலை தெரிவித்து கடந்த நவம்பரில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க சமூகவலைதள நிறுவனங்கள் போதுமான நடவடிக்கையை எடுப்பதில்லை.

ஓன்லைனில் மற்றவர்கள் மனதை நோகும்படி பேசுவது, வெறுப்புணர்வை பரப்புவது போன்ற விடயங்களை தடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மேலும் மெனக்கெட வேண்டும் என பேசியிருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுமி மாலியின் உறவினர்களை தனிப்பட்ட முறையில் இளவரசர் வில்லியம் தொடர்பு கொண்டு பேசுவுள்ளதாக Telegraph பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையில் தனது மகளின் மரணத்துக்கு காரணம் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் தான் எனவும், சமூகவலைதளங்கள் பாதுகாப்பான இடமாக எல்லோருக்கும் இருக்கவேண்டும் எனவும் அதிலும் முக்கியமாக இளம் வயது நபர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாத இடமாக இருக்க வேண்டும் எனவும் மாலியின் தந்தை இயன் கூறியுள்ளார்.