பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத் தான் கால் ஆணி என்று கூறப்படுகின்றது.
காலில் ஆணி வந்து விட்டால், பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.
உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் , அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்த நோய் பலருக்கு வருகிறது.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. குறிப்பாக வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.
கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.
இதில் இருந்து விடுபட சில வீட்டு வைத்திய முறைகளை பார்ப்போம்.
சமையல் சோடா
சூடான நீரில் இரண்டு தேக்கரண்டி சமையல் சோடா சேர்த்து, கால்களை அதில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். ஆணி உள்ள இடத்தில் படிகக்கல் வைத்து தேய்த்து காய்ந்த தோலை எடுக்கவும்.
ஒரு தேக்கரண்டி சமையல் சோடா, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்யவும். கவனமாக இதை ஆணி உள்ள இடத்தில் தடவவும். ஒரு பேண்டேஜ் வைத்து கட்டி இரவு முழுவதும் விடவும். அடுத்த நாள் காலையில், கட்டை பிரித்து அந்த பேஸ்டை மிதமான சுடுநீரில் கழுவி, காய்ந்த தோலை படிகக்கல் வைத்து தேய்த்து உதிர்க்கவும்.
எலுமிச்சை
ஆணியின் மீது, பிரெஷ் எலுமிச்சை சாறு விட்டு, அதை காய விடவும். நாளொன்றுக்கு மூன்று முறையாவது இதை செய்யவும்.
ஒரு தேக்கரண்டி பிரெஷ் எலுமிச்சை சாற்றில் இரண்டு கிராம்புகளை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்பு கிராம்புகளை எடுத்துவிட்டு எலுமிச்சை சாற்றை ஆணி மீது விடவும். அது காய்ந்த பின் மறுபடியும் விடவும். ஒரு நாளுக்கு பல முறை இதை செய்யவும்.
எலுமிச்சை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி புளிப்பு ஈஸ்ட் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இதை ஆணி உள்ள இடத்தில் தடவி, பேண்டேஜ் போட்டு, இரவு முழுவதும் விடவும்.
பூண்டு
பாதி பூண்டை ஆணியின் மீது வைத்து தேய்க்கவும். தோல் காய்ந்த பிறகு, பேன்டேஜ் போட்டு இரவு முழுவதும் விடவும். அடுத்த நாள் காலையில் கட்டை பிரித்து, கால்களை மிதமான நீரில் கழுவவும். கால் ஆணி மறையும் வரை தினமும் இரவு இதை செய்யவும்.
இரண்டு மூன்று பூண்டு துண்டுகளை உப்பு கலந்து ஒரு பேஸ்ட் போல செய்து அதையும் காலில் தடவலாம். இந்த பேஸ்டை காலில் ஆணி உள்ள இடத்தில் தடவி, பேண்டேஜ் போட்டு மூன்று நாட்கள் விடவும். மூன்றாவது நாள், கட்டை பிரிக்கும்போது, ஆணி உதிர்ந்து வந்து விடும். தேவைபட்டால், இதை மீண்டும் செய்யவும்.
இரண்டு பூண்டு விழுதுகளை வைத்து பேஸ்ட் போல செய்து, சிறிது வினிகர் சேர்த்து அதை ஆணி மீது தடவவும். அதன் மீது பஞ்சு வைத்து, டேப் போட்டு ஒட்டவும். மூன்று மணி நேரம் கழித்து டேப்பை நீக்கி அந்த இடத்தை சுத்தம் செய்யவும். பல வாரங்களுக்கு இதை மீண்டும் மீண்டும் செய்யவும்.