பொள்ளாச்சி வழக்கு , அதிகாரிகள் மீது பாய்ந்தது சட்டம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இந்த விஷயம் தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும்., அவர்களிடம் இருந்த காணொளி காட்சிகளில் மூன்று பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., திருநாவுக்கரசு கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தன்னிடம் பயிலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்ததும்., மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில்., சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திருநாவுக்கரசின் பண்ணை இல்லம் மற்றும் அவனுடைய இல்லத்தில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில் திருநாவுக்கரசின் இல்லத்தில் இருந்த 10 அலைபேசிகள்., மெமரி கார்டுகள் மற்றும் பென் டிரைவுகள் கைப்பற்றப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான விசாரணையானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவர்கள் அனைவரும் கைதாகி தீவிர விசாரணையில் உள்ள நிலையில்., இவர்களின் விசாரணை காலக்கெடுவை வரும் ஏப்ரல் மாதம் 2 ம் தேதி வரை நீட்டித்து நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்., இந்த வழக்கில் மற்றொரு இளைஞருக்கும் தொடர்பு உள்ளது என்றும்., அவரை கைது செய்து விசாரணை செய்யும் பட்சத்தில் மேலும் பலர் இந்த வழக்கு விசாரணையில் கைது செய்யப்படலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சனையில் காவல் நிலையத்தில் புகார் அளித்த மாணவியின் பெயர் மற்றும் விபரங்களை வெளியிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில்., மாணவியின் பெயர் மற்றும் விபரங்களை வெளியிட்ட கோயம்புத்தூர் எஸ்.பி பாண்டியராஜன் மற்றும் உள்துறை செயலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவலை தெரிவித்துள்ளது.

மேலும்., பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோயம்புத்தூர் எஸ்.பி மற்றும் உள்துறை செயலாளர் மீது வழக்கு பதிவு செய்ய கூறி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.