நொறுக்கித்தள்ளிய கொல்கத்தா! நொந்துபோன ஹைதராபாத்!

12 ஆவது ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் காயமடைந்து இருப்பதால், அவருக்கு பதிலாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கேப்டனாக இந்த போட்டிக்கு நியமிக்கப்பட்டார். இந்த போட்டி தொடரில் அந்நிய நாட்டு வீரரை கேப்டனாக கொண்ட ஒரே அணியான ஹைதராபாத் தனது கேப்டனை மாற்றியதால் எட்டு அணிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டன் என்ற சூழல் உருவாகியுள்ளது.

ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் இங்கிலாந்து அணியின் ஜான் பெயர்ஸ்டோவும் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். ஒரு புறம் பெயர்ஸ்டோ நிதானம் காட்ட மறுபுறம் வார்னர் ரன்களை அதிரடியில் வாரினார். 35 பந்துகளில் 39 ரன்களை எடுத்திருந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் ஜாவ்லாவின் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

ஆனால் அதன் பிறகு இந்தியத் வீரர் விஜய் சங்கர் வர்னருடன் இணைந்து அதிரடியாக விளையாடி ஐதராபாத் அணியின் ரன்ரேட் வேகமாக எகிறியது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 53 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 85 ரன்கள் எடுத்திருந்தபோது ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸூலின் பந்து வீச்சில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதான் 4 பந்துகளில் 1 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் விஜய் சங்கரின் 24 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் என அதிரடி கைகொடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியின் சார்பில் 7 பேர் பந்து வீசிய நிலையில் சாவலா 1 விக்கெட்டையும் ரசெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனை அடுத்து ஆட்டத்தை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 7 ரன்களில்1 சிக்சருடன் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா இருவரும் நிதானமாக அதே சமயம் ரன்ரேட் குறையாமலும் சிறப்பாக விளையாடிய நிலையில் ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் உடன் ௩௫ ரன்களுக்கு சித்தார்த் கவுளின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அதை அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் 4 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

ஒரு கட்டத்தில் 15.2 ஓவரில் 118 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக மின் விளக்கு அணைந்ததால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது. அப்பொழுது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 28 பந்துகளில் 64 ரன்கள் அடிக்க அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. பின்னர் 10 நிமிட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய முதல் பந்திலேயே ரஷீத் கானின் துல்லியமான பந்துவீச்சில் 45 பந்துககளில் 68 ரன்களை 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் எடுத்து பெவிலியன் திரும்பினார் நிதிஷ் ராணா.

இதனையடுத்து ஐதராபாத் அணியின் வெற்றி உறுதி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17-ந் ஓவரை வீச வந்த புவனேஸ்வர்குமார் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து ஹைதராபாத் அணிக்கு வெற்றிக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். கடைசி 3 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான நிலையில் கொல்கத்தா அணி இருந்தபோது 18-வது ஓவரை வீசிய சித்தார்த் கவுளின் பந்துவீச்சில் 2 சிக்சர் ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்களை அடித்து நொறுக்கினார் ஆன்ட்ரே ரசெல். அதனை அடுத்து 12 பந்துகளில் 34 ரன்கள் என்ற நிலையில் இருக்கும்போது 19-வது ஓவரை வீசிய கேப்டன் புவனேஷ்வர் குமார் ஓவரில் அதே ரசெல் 2 பவுண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் விளாசினார். அந்த ஓவரில் மொத்தம் 21 ரன்கள் எடுக்கப்பட இறுதி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் ஷாகிப் அல் ஹசன் வீச வந்தார்

அப்போது முதல் பந்து வைடாக, அடுத்த பந்தில் ரசெல் 1 ரன் எடுக்க இளம் வீரர் ஷுப்மான் கில் அடிப்பாரா, அடிக்க மாட்டாரா என்று எதிர்பார்த்த நிலையில் அட்டகாசமாக 2 சிக்சர்களை தூக்கி இரண்டு பந்துகள் மீதமிருக்க்கும் போதே கொல்கத்தா அணிக்கு எதிர்பாராத திரில் வெற்றியை பெற்று கொடுத்தார். கொல்கத்தா அணியின் வெற்றி சொந்த மண்ணில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அந்த அணியின் ரசேல் 19 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 49 ரன்களை குவித்தார். ஷுப்மான் கில் இரண்டு சிக்ஸர்களுடன் 10 பந்துகளில் 18 ரன்களை அடித்தார்.

ஹைதராபாத் அணியின் சார்பில் சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல், சாகிப் ஹசன், ரஷீத் கான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.