ஐபிஎல் எல்லாம் ஒகே தான்! சிக்சர் மழை பொழிந்த ரிஷப் பாண்ட்!

இன்றைய ஐபிஎல் போட்டியில் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் ஆடி வருகிறது. டெல்லி அணியின் கேப்டனாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யரும் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும் டாஸ் போட வந்த நிலையில், டாஸ் வென்ற ரோஹித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ரோஹித் ஷர்மா, அறிமுக வீரராக களத்தில் இறங்கிய, மிகவும் இளம் வயது வீரரான 18 வயது கூட நிரம்பாத ராசிக் சலாமை முதல் ஓவரை வீச வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா, தவான் களம் இறங்கிய நிலையில் ப்ரித்வி ஷா 6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த திருப்தியுடன் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 10 பந்துகக்ளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 16 ரன்களுக்கு நடையை கட்டினார்.

அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவின் காலின் இங்க்ரம், ஷிகர் தவனுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தினை ஆடினார்கள். 32 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய ரிஷப் பாண்ட் ஆரமபத்தில் இருந்து சரவெடியாக வெடிக்க மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த ஷிகர் தவான் 43 ரன்களில் 36 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கீமோ பால் 5 பந்துகளில் 3 ரன்கள் அக்சர் படேல் 2 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அதிவேக அரை சதம் அடித்து, 18 பந்துகளில் 50 ரன்களை கடந்து மும்பைக்கு எதிராக அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ரிஷப் பாண்ட். இறுதியில் ராகுல் திவேதியா ஒத்துழைப்பு கொடுக்க 27 பந்துகளில் 7 பவுண்டரி 7 சிக்சருடன் 78 ரன்கள் குவிக்க டெல்லி அணி இந்த தொடரில் 200 ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது. முடிவில் டெல்லி அணி 213 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை அணியின் சார்பாக பந்துவீசிய 6 பேருமே ஓவருக்கு தலா 10 க்கும் அதிகமான அளவிற்கு ரன்களை வழங்கி மோசமாக பந்து வீச்சினை பதிவுசெய்தார்கள். 4 ஓவர்களை முழுமையாக வீசிய ராசிக் சலாம் 42 ரன்களும், மேக்லகன், பும்ரா தலா 40 ரன்களும், ஹர்டிக் பாண்டியா 41 ரன்களும் என வரி வழங்கினார்கள்.