மைத்திரி – ரணில் கூட்டணி மீண்டும்? சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி!

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் அமைச்சர்களாக நியமிக்கவுள்ள அக்கட்சி உறுப்பினர்களின் பெயர்களை, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியினர் சிலரை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளாதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அவர்களில் விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஸ்மன் செனவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரே அமைச்சர்களாக நியமிக்கப் பரிந்துரைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய பரந்துபட்ட கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் 15 பேர் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக அவர்கள் எதிர்வரும் வரவு-செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின் பின்னர் தமது கட்சிக்கு வருவார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள நிலையில், தற்போது 4 சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்று அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.