கும்பகோணத்தில், சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன், செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை,
ரமணன் மாணவர்களுக்கு சில அறிவுரை கூறினார். மாணவர்கள் செய்தித்தாள்களை படித்து குறிப்பெடுத்து கொள்ள வேண்டும். செல்போன் பயன்பாட்டை மாணவிகள் முழுவதும் குறைத்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் கல்வியின் தரத்தில் இன்னும் அதிகளவில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும். ஒரே நாளில் படித்து ஐ.ஏ.எஸ். ஆக முடியாது. ஆரம்பத்தில் இருந்தே படித்து வந்தால்தான் சாத்தியமாகும். இதற்காக அனைத்து பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்.
தற்போது இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதனால் நீட் தேர்வுக்கு தகுந்தாற்போல் நாம் படிக்க வேண்டும். அதற்கு நமது மனநிலையை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். ரயில்வே மற்றும் மத்திய அரசு பணிகளில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் உள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் மாணவர்களை ஊக்குவிக்க போதிய உந்து சக்திகள் இல்லை. நாம் என்ன மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து கனவு காண வேண்டும். கனவு நிறைவேறாமல் போனாலும், கனவு காணுவதை விட்டுவிடக் கூடாது. கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும் என்று கூறினார்.
மேலும், நகர பகுதிகளில் உள்ள வயல்கள், வெட்ட வெளிகளை அழித்து விட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதனால்தான் தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் இன்னமும் வெப்பம் அதிகரிக்க அபாயம் உள்ளது என்று கூறினார்.