நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு நயன்தாராவை இழிவுபடுத்தும் வகையில் பல கருத்துக்களை கூறியுள்ளார். இதற்கு பல நடிகர், நடிகைகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கழகத்திற்கு அவதூறு ஏற்படும் வகையில் செயல்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தும், முக ஸ்டாலின் நன்றி தெரிவித்தும் நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நான் பொதுவாக திரையுலக பிரச்சினைகள் குறித்து அறிக்கைகள் எதுவும் வெளியிடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு எதிரான ஆண்களின் தவறான எண்ணங்களால் தற்பொழுது இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டு உள்ளேன்.
அதற்கு முதலாக பெண்களை இழிவுபடுத்திய ராதாரவியை கட்சியிலிருந்து விளக்கி உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் மு க ஸ்டாலின்க்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதனை தொடர்ந்து ராதாரவி, தான் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து பிறந்தவர் என்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது. சினிமா துறையில் மூத்த தலைவராக விளங்கும் இவர் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ வேண்டும். ஆனால் அதனை விடுத்து பெண்கள் குறித்து தவறான விமர்சனங்களை எழுப்பக்கூடாது.
மேலும் ராதாரவி சரியான படவாய்ப்புகள் இல்லாததால் அனைவரின் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு கீழ்த்தரமாக பேசி பிரபலம் அடைய முயற்சிக்கிறார். இவற்றில் வேதனைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் அவருடைய பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கைதட்டி சிரித்ததுதான். ராதாரவி போன்ற பெண்களை இழிவு படுத்தி பேசுபவர்களை பொதுமக்களும் எனது ரசிகர்களும் ஒருபோதும் ஆதரிக்க கூடாது என்பதே எனது அன்பான கோரிக்கை.
எனது திறமைக்கு ஏற்ற வேலையை கடவுள் கொடுத்திருக்கிறார். அதனாலேயே பல சர்ச்சைகளையும் தாண்டி நான் எனது ரசிகர்களுக்காக பேய், சீதா மனைவி, காதலி, தோழி, அம்மா, அவள், தங்கை என பல வேடங்களில் வித்தியாசமாக நடித்து வருகிறேன்.
மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சங்கத்தில் வழிபாட்டு முறையின் அடிப்படையில் விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் என்பதே நடிகர் சங்கத்திற்கு எனது வேண்டுகோள். மேலும் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Thanking all the Good Hearts?? pic.twitter.com/b80jX5al9z
— Nayanthara✨ (@NayantharaU) 25 March 2019