கடந்த ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு லண்டனில் தமிழர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். லண்டன் (ஹரோ) வுக்கு அருகாமையில் உள்ள பினர் என்னும் இடத்தில், சொந்தமாக கடை வைத்திருக்கும் ரவி என்னும் 54 வயதுடைய ஈழத் தமிழரே இவ்வாறு இனம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. சொந்தமாக நியூஸ் ஏஜன்ட் வைத்து நடத்தி வந்த இவர், ஞாயிறு காலை சுமார் 6 மணிக்கு கடையை வழமைபோல திறக்க முற்பட்டுள்ளார். திடீரென அங்கே வந்த நபர் ஒருவர் ரவியை கத்தியால் குத்திவிட்டு கடைக்குள் நுளைந்து கல்லாப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார்.
அருகில் சென்ற நபர் ஒருவர் கொடுத்த தகவலை அடுத்து உயிர் காக்கும் அவசர உதவிப் பிரிவான பரா மெடிக்ஸ் பிரிவினர் பொலிசாரை விட முன்னரே விரைந்து வந்துவிட்டார்கள். பொலிசாரும் உடனே வந்து அவர் உயிரைக் காப்பாற்ற 45 நிமிடங்கள் வரை போராடியுள்ளார்கள். இருப்பினும் ரத்தப் பெருக்கு அதிகமானதால், அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் கத்திக் குத்துக் கலாச்சாரம் 160% விகிதத்தால் தற்போது அதிகரித்துள்ளது. சனிக் கிழமை இரவு 21 வயது இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு பிறிதொரு இடத்தில் இறந்துள்ளார். அடுத்த நாள் காலை 6 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லண்டனில் வியாபார நிலையங்களை வைத்திருக்கும் தமிழர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இரவில் கடைகளை பூட்டும் போதும். காலையில் திறக்கும் போதும் அவதானமாக இருப்பது நல்லது. கடைக்கு வெளியே யார் நிற்கிறார்கள் ? அவர்கள் உங்களை அவதானிக்கிறார்களா ? வெளியே செல்வது உகந்ததா என்று எண்ணி செயல்படுவது நல்லது. பழகுவதற்கு மிகவும் நல்லவர், எழிமையான மனிதர். அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர் என்று பல வேற்றின மக்கள், மற்றும் இவரை தெரிந்த தமிழர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நல்ல ஒரு ஈழத் தமிழரை இன்று நாம் இழந்து தவிக்கிறோம். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு இணைய வாசகர்களும் பிரார்த்திப்போமாக.