எனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15 ஆம் திகதி நடந்த துப்பாக்கிசூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் இந்தியர்கள் 5 பேர் பலியாகியிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் அன்ஸி அலிபாவா. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தனது கணவர் அப்துல் நாசருடன் கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு சென்றுள்ளார்.
வேளாண் வர்த்தக மேலாண்மையில் முதுகலைப் படிப்பில் பட்டம் பெற்ற இவர் துரதிர்ஷ்டவசமாக துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தார்.
தன் மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காக அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் குறைந்த சம்பளத்துக்குப் பணிபுரிந்து வந்துள்ளார் அப்துல்.
அன்ஸி பட்டம் பெற்றுவிட்டதால் அவர் அதிக சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றுவிடுவார். இனி இருவரும் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது.
எங்கள் திருமணம் முடிந்த பிறகு நாங்கள் அதிக காலம் ஒன்றாகக் கழித்தது நியூசிலாந்தில்தான். எனவே அவளுடன் வாழ்ந்த அந்த இடத்தை விட்டு வரப்போவதில்லை. அங்கேயே வசிக்க போகிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதற்கிடையே இறந்துபோன அன்ஸியின் உடல் கேரளா கொண்டுவரப்பட்டு இன்று அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் நடந்தது.