குக்கர் சின்னம் கேட்டு நீதிமன்றம் போன வழக்கில், கிட்டதட்ட மூழ்கும் கப்பல் போன்ற நிலையில் இருந்த தினகரனின் பிரஷர் குக்கர் வழக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் தூக்கி நிறுத்தியவர் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி என்ற தகவல் கிடைத்துள்ளது.
கடைசி நேரத்தில் அவருடைய வாதம் மட்டும் இல்லை என்றால் தினகரனுக்கு அனைத்து வேட்பாளருக்கும் பொதுவான ஒரே சின்னம் என்ற இந்த இறுதி கட்ட மகிழ்ச்சி கூட கிடைத்திருக்காது என்ற தகவலும் கிடைத்ததுள்ளது.
பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கபில் சிபலின் வாதத்தை மறுத்து வழக்கு தொடர்பான பேப்பரை ஒதுக்கிய பிறகு, அபிஷேக் மனு சிங்விதான் குறுக்கிட்டு 59 வேட்பாளருக்கும் தனித்தனி சின்னத்தில் போட்டியிடுவது என்பது இயலாத ஒன்று என்றும், பிரஷர் குக்கர் இல்லை என்றால் அனைத்து வேட்பாளருக்கும் வேறு ஒரே சின்னத்தை நீதிமன்றம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வலுவான வாதங்களை முன்வைத்தார். அதன் பிறகுதான் வழக்கின் போக்கு திசை மாறத்துவங்கியது.
வாதத்தின் முடிவில் தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தரப்பின் எதிர்ப்புகளை மீறி தினகரன் அணியினருக்கு பொதுவான ஒரே சின்னத்தை ஒதுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பொதுவான சின்னம் என்பது தினகரனுக்கு தற்போது ஓரளவு மகிழ்ச்சியான தீர்ப்பு தான் என்று அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.