‘வாழ்க்கையியில் ஒரு முறையாவது கைதாக வேண்டும்’ பாட்டியின் வித்தியாசமான ஆசை!!

இங்கிலாந்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள பிஸ்டல் நகரில் ஒரு பராமரிப்பு இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பராமரிப்பு இல்லத்தில் உள்ளவர்கள் தங்களது இல்லத்தில் உள்ள முதியவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து, அடுத்த கட்டமாக அவர்களின் ஆசையை ஒரு காகிதத்தில் எழுதி கிண்ணத்தில் போடுமாறு கூறப்பட்டது. அனைத்து முதியவர்களும் தங்களின் விதவிதமான ஆசைகளை எழுதி அந்த கிண்ணத்தில் போட்டனர்.

அதேபோலவே அண்ணி புரோக்கன் என்ற ஒரு மூதாட்டி தனது வாழ்க்கையில் ஒருமுறையாவது தன்னை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்பது எனது ஆசை என தெரிவித்திருந்தார். இவருக்கு 104 வயது.

தன்னுடைய கடிதத்தில் வாழ்நாள் முழுவதும் நான் சட்டத்தை மதித்து நடந்து உள்ளேன். இதுவரை போலீசிடம் பிடிபட்டது இல்லை. எனவே, என்னுடைய ஆசை கைதாக வேண்டும் என்பது தான் என குறிப்பிட்டிருந்தார். அதை பராமரிப்பு இல்லத்தில் இருந்தவர்கள் படித்து அவரின் ஆசையை நிறைவேற்ற முடிவு எடுத்தனர்.

பின்னர் அருகில் இருக்கும் உள்ளூர் காவல் துறையை அணுகி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். காவலர்களும் அந்த மூதாட்டியின் ஆசையை நிறைவேற்ற முன் வந்தனர். பராமரிப்பு இல்லம் இருக்கும் இடத்திற்கு காவலர்கள் சென்று அவரின் கைகளில் விலங்கிட்டு, பின்னர் அவரை கைது செய்து போலீசார் காரிலேயே அவரை அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து அந்த மூதாட்டி, “இது நாள் வரை எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது இல்லை. இந்த நாள் மிகவும் இனிமையானது. வெகு சுவாரஸ்யமாக கழிந்தது. போலீசார் எனது கைகளில் விலங்கு போட்டு கைது செய்தபோது நான் முழுமை அடைந்ததாக உணர்ந்தேன். குற்றவாளியாக இருப்பதில் என்ன சந்தோஷம் என நினைக்கிறீர்களா ?

அதுதான் நாம் என்ன செய்யவேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதை வருங்காலத்தில் கவனத்துடன் இருக்க வைக்கும். மேலும், காவலர்கள் என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்.” என கூறினார் 104 வயதான இவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.