மகளுக்கு இருக்கும் குரோமோசோம் குறைபாட்டால் தன்னுடைய வேலையை இழந்து பெரும் குழப்பத்தில் இருப்பதாக தாய் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை பூர்விகமாக கொண்ட நாகராஜா சுகிந்தன் (53) – நிலானி (52) தம்பதியினர் கடந்த 1990ம் ஆண்டு பிரித்தானியாவில் குடியேறினர்.
இப்போது டப்ளினில் வசித்து வரும் இவர்களுடைய குடும்பம், கடந்த 25 ஆண்டுகளாக பக்கிங்ஹாம்ஷையரில் வசித்து வந்தது. இவர்களுக்கு தன்யா (19), பூமிகா (15) மற்றும் சௌமியா (14) என்கிற மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
ஐ.டி ஆலோசகராக பணிபுரிய $ 140,000 சம்பளத்தில் நிலானிக்கு கடந்த ஆண்டு நியூசிலாந்தில் வேலை கிடைத்தது. அங்கு குடியேற விரும்பிய நிலானி தன்னுடைய குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
அதற்காக அனைவரும் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் அனைவருக்குமே விசா வந்துவிட்டது. ஆனால் அவருடைய இரண்டாவது மகள் பூமிகாவின் ஆவணங்களில் சிக்கல் இருப்பதால் அனைத்தையும் சமர்ப்பிக்குமாறு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகாரிகள் விசா கொடுக்க மறுத்துள்ளனர்.
அதன்பிறகு சமர்ப்பித்த ஆவணங்களில் பூமிகாவிற்கு குரோமோசோம் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நியூசிலாந்து குடியேற்ற அதிகாரிகள், பூமிகா சுமையாக இருப்பார் எனக்கூறி அவருக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதனை எதிர்த்து நாகராஜா மற்றும் அவருடைய மனைவி நிலானி கடந்த 3 மாதங்களாக மேல்முறையீடு செய்தனர். கடந்த வாரம் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்பொழுது அதிகாரிகளின் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் நிலானி, நான் என்னுடைய மகளிடம் எப்பொழுது கூறுவேன், அவளிடம் எதுவும் வித்யாசமாக இல்லை என்று. ஆனால் இந்த முறை கண்ணீர் தான் அதிகரிக்கிறது. அவள் அடிக்கடி நாம் ஏன் நியூசிலாந்து செல்லவில்லை என கேட்கிறாள். அதனை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவளை ஒரு சிறப்பு பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப அதிக பணம் செலவிட வேண்டும் என அந்த அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். என்னுடைய ஒரு மாத வரி பணம் அவளுடைய ஒரு ஆண்டு பள்ளிப்படிப்பிற்கும் போதுமானதாக இருக்கும். ஆனால் அதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை என கூறிவிட்டனர். பாரபட்சம் பார்ப்பதை தவிர இதில் வேறு எந்த அர்த்தமும் இல்லை.
பூமிகாவிடம் ஒரு மிதமான இயலாமை உள்ளது. ஆனால் அவளால் நடக்க முடியும், பேச முடியும், உடை கூட அணிந்துகொள்ள முடியும். வகுப்பறையில் மட்டுமே அவளை கூடுதலாக கவனிக்க உதவி தேவைப்படும்.
அப்படி இருந்தும் தற்காலிக விசாவிற்கு கூட அவர்கள் ஏன் மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் அங்கு ஒரு புதிய வாழ்வை துவங்கலாம் என திட்டமிட்டோம். அதற்கு பதிலாக தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.
நியூசிலாந்திற்கு செல்ல முடியாமல் மலேசிய விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டோம். அந்த நாட்டின் உணவுகளை சாப்பிட்டு அங்கேயே ஒரு ஹோட்டலில் அறை எடுத்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினோம்.
என் மகள்களை மிகவும் நேசிக்கிறேன். அவர்களுக்கு உலகின் மற்றொரு பக்கத்தை காட்ட விரும்பினேன். ஆனால் தற்போது ஒரு புதிய வாழ்க்கையினை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்த காரணங்களால் தற்போது நியூசிலாந்து வேலையை வேண்டாம் என நிலானி கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசுகையில், நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். அது ஒரு நல்ல இடமாகவும், எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கு நிறைய கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன்.
4 பேருக்கு விசா கிடைத்த பின்னரே நான் அந்த வேலைக்கு முழுமையாக ஒப்புக்கொண்டேன். பூமிகாவிற்காக நான் அதிக ஆவணங்களை அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் இன்னும் அவளை நிராகரிக்கிறார்கள். பூமிகாவிற்கான சிறப்பு கல்வி முறைக்கு மிகவும் செலவாகும் என்று அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர்.
நான் கடினமாக உழைத்து என் மகளுக்கான கல்விச்செலவில் பங்களிக்க தயாராக இருந்தேன். ஆனால் போய்விடு என்று அவர்களால் சொல்லப்பட்டுவிட்டேன்.
இந்த சம்பவம் நடந்ததிலிருந்து தூக்கமில்லாத பல இரவுகளை சந்தித்திருக்கிறேன். நான் செய்த காரியங்களில் இது தான் மிகவும் கடினமான ஒரு விடயம். நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிட்டேன். பணம் சம்மந்தப்பட்டதில் அல்ல. கொள்கை சம்மந்தப்பட்டதில்.
குரோமோசோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுடைய தாய்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்று தான். கவலைகளில் இருந்து உங்களை நீங்கள் தான் காத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வேலையை முழுமையாக கைவிட்டு தற்போது பெரும் குழப்பத்தில் நாங்கள் இருக்கிறோம் என வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நியூசிலாந்து குடியேற்ற அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமிகாவின் உடல்நிலை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லாத காரணத்தினாலும், சுகாதார மற்றும் கல்விச் சேவைகளில் “குறிப்பிடத்தக்க செலவினங்களைச் சுமத்தக்கூடும்”என்பதாலும் அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.