ஏப்ரல் ஒன்று முதல் பிரித்தானியாவில் ஆபாச படம் பார்ப்பதற்கு அடையாள அட்டை முதலானவை குறித்த தகவல்கள் அளிக்க வேண்டும் என புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவில் அதற்கு கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது.
சிறுவர் சிறுமியர் ஆபாச இணையதளங்களை பார்வையிடுவதை தடுக்கும் வகையில் அடுத்த திங்கட்கிழமையிலிருந்து இந்த சட்டம் அமுலுக்கு வர இருக்கிறது.
சிறுவர் சிறுமியர் ஆபாச படங்களையும் வீடியோக்களையும் பார்த்து விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அதற்கு எதிர்ப்பும் தோன்றியுள்ளது.
The Adam Smith Institute (ASI) என்னும் நிறுவனம் அந்த சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளது.
இத்தகைய சட்டம், பிளாக் மெயில் செய்பவர்களுக்கு பணம் சம்பாதிக்க எளிய வழியை ஏற்படுத்தும் என்றும் நமக்கு எதிராக செயல்பட விரும்பும் நாடுகள் தவறாக அதைப்பயன்படுத்தவும் காரணமாக அமையும் என்றும் அது கூறுகிறது.
கிரெடிட் கார்டு மற்றும் அடையாள அட்டை குறித்த தகவல்களை ஆபாச இணையதளங்களுக்கு வெளியிடுவது கிரெடிட் கார்டு மோசடி மற்றும் அடையாள திருட்டுக்கு வழிவகுக்கும் என்றும் அது கூறுகிறது.
திங்கட்கிழமையிலிருந்து ஆபாச இணையதளங்களை பார்வையிட விரும்புவோர் தாங்கள் 18 வயதை அடைந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது கிரெடிட் கார்டு முதலானவை குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியர்களின் தனியுரிமையை இது மீறுவதாக ASI கூறுகிறது. ஆனால், இந்த வயது சரி பார்த்தலின் நோக்கம் சிறுவர்களின் இணைய பாதுகாப்புக்காக மட்டுமே என்று அரசு கூறுகிறது.