கடலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சால்வை அணிவிக்க சென்ற இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மக்களவைத் தொகுதி ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டை. இதுவரை நடந்த 14 மக்களவைத் தேர்தல்களில் ஏழு முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
திமுகவுக்கு இந்தத் தொகுதியில் நான்கு முறை வெற்றி கிடைத்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை ஒரே முறை இங்கு வென்றிருக்கிறது. கடந்த 2014-ல் நடந்த தேர்தலில் அதிமுகவின் அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார்.
சமீப காலமாக இத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் காரணமாக வெற்றி வாய்ப்பு அதிமுக பக்கம் சாய்ந்து வருகிறது. இதனை சமாளிக்க திமுக வியூகம் வகுத்து வருகிறது.
இந்த நிலையில், பண்ருட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு மட்டுமே தொடர்ச்சியாக சால்வை அணிவிக்க அனுமதிக்கப்பட்டது.
இதனால் பொறுமையிழந்த மற்றொரு பிரிவினர் தகராறில் ஈடுபட்டனர். திமுக கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்ட இந்த சண்டை அங்கு கூடியிருந்த தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
வீழ்ந்த தொகுதியில் மீண்டு வர ஆலோசனை நடக்கும் என்று பார்த்தால், இப்படி அடி தடி போட்டுக்கொள்ளும் போதே முடிவு தெரிந்து விட்டது என்று புலம்பியபடி சென்றனர் திமுக தொண்டர்கள்.