தேர்தலுக்கு முன்பே அல்வா கொடுத்த ஸ்டாலின்!

திமுக வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதமான 13 தொகுதிகளை வட தமிழகத்தில் நிறுத்துகிறது. வட தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமூகமான வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் ஓட்டுக்களே திமுகவின் பலமாக இருந்து வருகிறது. வட தமிழகத்தின் வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகளாக இவ்விரு சமுதாய வாக்குகளே உள்ளது என்பதை உணர்ந்து திமுக இவ்வாறு தொகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளது.

இத்தகைய சூழலில் தமிழகத்தில் மொத்தம் 7 தனித் தொகுதிகளில் ஐந்து வட தமிழகத்தில் மட்டுமே உள்ளது. ஆனால் இந்த 5 தனித் தொகுதியில் திமுக 4 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. காஞ்சிபுரம் தொகுதியில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது. திருவள்ளூர், விழுப்புரம், சிதம்பரம், நாகப்பட்டினம் தொகுதிகளை கூட்டணி கட்சிகளின் தலையில் கட்டிவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் தனித்தொகுதியில் திமுக வேட்பாளர்களை நிறுத்தினால் அவர்கள் வென்று, பெரும்பானமையாக வந்தால், திமுகவில் அமைச்சர் பதவிக்கு நெருக்கடி வரும் என்பதால் திட்டமிட்டே தனி தொகுதிகளை தேர்ந்தெடுக்காமல் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு செய்து ஒதுக்கிவிட்டது. திமுக கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் இடம்பெற்ற போது 18 எம்பிக்களை மட்டுமே கொண்டு 7 அமைச்சர்கள் வரை பெற்றது. ஆனால் அதில் தலித் அமைச்சராக அவர்களின் தலைமைக்கு விசுவாசமாக இருக்கும் ஆ ராசாவிற்கு மட்டும் தான் என்பது எழுதப்படாத விதி.

திருவள்ளூர் தனித்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் கூட அமைச்சர் பதவி என்பது கானல் நீரே. ஏனெனில் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் பட்டியல் தமிழகத்தில் நீண்டுகொண்டே இருக்கிறது. தேர்தலில் தொகுதி பெரும் போராட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.

சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சிகளின் வேட்பாளர்கள் நிலைமையோ அதளபாதாளத்தில் தான் இருக்கிறது. தேர்தலில் கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் சீட்டு ஒதுக்கிய பிறகே பல நாட்களாக அறிவாலயத்தில் காத்திருந்த விசிகவிற்கு கடைசி வரை இழுபறி செய்து ஏனோதானோ என்று 2 சீட்டுகளும் அதில் ஒன்றை திமுக சின்னத்தில் போட்டியிடவும் கொடுத்தது திமுக.

இப்படி இருக்கும் பட்சத்தில் ஆட்சிக்கு வந்தால், திமுக விசிகவிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் என்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போலத்தான். மேலும் திமுகவில் அமைச்சர் பதவிக்கு ஸ்டாலின் குடும்பத்தினரே தயாநிதி மாறன், சபரீசன், கனிமொழி என வரிசைகட்டி நிற்கிறார்கள். போதாக்குறைக்கு பாலு, ராசா, ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம் என சீனியர்களும் நிற்கிறார்கள்.

தமிழகத்தின் இதர தனிதொகுதிகளான நீலகிரியில் அங்கே இருக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வடக்கே இருக்கும் ராசாவை மூன்றாவது முறையாக அங்கே நிற்கவைக்கிறர்கள். இதனால் அங்கே வாழும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் உரிமையை திமுக பறித்துவிடுகிறது. ஆனால் அதே சமயம் தென்காசியில் 28 வருடங்களுக்கு பிறகு அந்த தொகுதியினை வாங்கி பள்ளர் சமூக வேட்பாளாரையும் நிறுத்தி மன்னின் மைந்தர்களுக்கு வாய்ப்பை கொடுத்துள்ளனர்.

திமுக வை பல ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்திருப்பது வட தமிழ்நாட்டின் இருபெரும் சமூகங்களே என்பது இதுவரை தேர்தல் முடிவுகளை பார்த்தால் அனைவருக்கும் தெரியும். அச்சமூகங்களுக்கே தூரோகம் இழைக்கும் வகையில் வேட்பாளர்களை திமுக நிறுத்தியுள்ளது. தென்மாவட்டத்தை சார்ந்த தலைவர்களை, அங்கே தொகுதியை பெற்று நிற்க வைக்காமல் வட தமிழகத்தில் நிற்க வைப்பதே திமுகவின் தொடர்கதையாகி போனது.

வட தமிழக மக்களின் வாக்கினை பெற்று எம்பி, அமைச்சர் ஆக வேண்டும் ஆனால் அந்த மக்களின் சார்பில் யாரும் பிரிதிநிதியாக வந்துவிடக்கூடாது என்பதையே திமுகவின் இதுவரையிலான வரலாறு கூருகிறது. இதுவரை மொத்தம் 22 அமைச்சர் பதவிகளை மத்தியில் பெற்றுள்ள திமுக 1 இணை அமைச்சர் பதவியை வன்னியர் சமூகத்திற்கும், 3 அமைச்சர் பதவியை தாழ்த்தப்பட்டவர் சமூகத்திற்கும் ஒதுக்கியுள்ளது. அதுவும் தலைமைக்கு விசுவாசமாக உள்ள ஆ ராசாவிற்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறை தேர்தலுக்கு முன்னரே வடக்கே வாழும் மக்களின் உரிமையை திமுக சுரண்டிவிட்டது என்றால் அது மிகையல்ல. வாக்கும் மட்டும் போடுங்க, அதிகாரம் எல்லாம் கேக்காதீங்க என்பது தான் நவீன தீண்டாமை என்பதை திமுக எப்போது உணருமோ!