கொலைக்கு நானே பொறுப்பு… பெண்ணை கழுத்தறுத்து கொன்ற நபர்: சிக்கிய கடிதம்

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் நபர் ஒருவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ரயில் நிலையம் அருகே பாண்டியராஜன் என்பவருக்கு சொந்தமான ஐஸ்கிரீம் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆறு மாதகாலமாக ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஷரீன் சித்தாரா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இன்றுகாலை கடையை திறந்தவிட்டு பாண்டியராஜன் வெளியே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் திரும்ப வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதில் சந்தேகமடைந்த பாண்டியராஜன் உடனடியாக சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு வந்த பொலிசார் ஷட்டரை உடைத்து பார்த்தபோது ஷரீன்சித்தாரா கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

மேலும் 54 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த ஷரீன் சித்தாராவுக்கும், அதேபகுதியை சேர்ந்த இனாமுல்லாஹ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த இருவரின் குடும்பத்தினரும் கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஷரீன் சித்தாராவை சந்திக்க இனாமுல்லாஹ் அவர் பணியாற்றும் கடைக்கு வந்துள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையால் ஆத்திரமடைந்த இனாமுல்லாஹ் கத்தியால் ஷரீன் சித்தாராவின் கழுத்தை அறுத்துவிட்டு உடனடியாக அதேகடையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இருவரின் சடலங்களையும் மீட்ட பொலிசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் மேற்கொண்ட ஆய்வில் 9 பக்க கடிதம் சிக்கியுள்ளது. அதில், தாம் செய்யப்போகும் கொலைக்கும், தற்கொலைக்கும் தாமே பொறுப்பு என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் குறித்த சம்பவமானது திட்டமிட்டே நடத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.